WhatsApp பயன்படுத்துபவர்களே உஷார்: இந்த மெசேஜை பார்த்தவுடன் அழித்துவிடவும்!

வாட்ஸ்ஆப்பில் பரவிவரும் (bug) மற்றும் அது ஏற்படுத்தி வரும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் க்ராஸ் பற்றி பார்ப்போம்


வாட்ஸ்அப் இந்தியாவில் பிரபலமாக தொடங்கியிருந்த காலகட்டம் அது. உலகம் அதைத் தகவல் பரிமாற்றத்துக்காகப் பயன்படுத்திக் கொண்டிருந்தது. ஆனால், இந்தியர்கள் அதைவிட வேறு சில வித்தியாசமான யோசனைகளைக் கைவசம் வைத்திருந்தார்கள். 

மொபைல் ரீசார்ஜ் முதல் விபத்தில் காயமடைந்தவர்களைக் காப்பாற்றுவது வரைக்கும் ஒரே ஒரு ஃபார்வர்ட் மெசேஜில் நடத்தி விட முடியும் என்று நம்பிக்கொண்டிருந்தார்கள். இந்த மெசேஜை பத்து குரூப்களுக்கு அனுப்பினால் நூறு ரூபாய்க்கு மொபைல் ரீசார்ஜ் செய்துகொள்ளலாம்,





பேட்டரியை சார்ஜ் செய்துகொள்ளலாம் என்பதுபோல பல மெசேஜ்களை சில ஆண்டுகளுக்கு முன்னர் வாட்ஸ்அப்பை பயன்படுத்தியவர்கள் அறிந்திருப்பார்கள்.


அதன் பின்னர் ஃபார்வர்ட் மெசேஜ்களின் உண்மை கொஞ்சம் கொஞ்சமாக மக்களுக்குப் புரிய ஆரம்பித்தது. தேவையற்ற மெசேஜ்களை ஷேர் செய்யப்படுவதும் குறைந்தது. இப்பொழுது முன்னர் போல பெரும் எண்ணிக்கையில் மெசேஜ்கள் பார்வர்ட் செய்யப்படுவதில்லை. ஃபார்வர்ட் மெசேஜ்களில் அது நடக்கும், இது நடக்கும் என்ற மெசேஜ்களுக்கு இடையே இதைத் தொடாதீர்கள் மீறித் தொட்டால் மொபைல் ஹேங் ஆகும் என்பது போலவும் பல மெசேஜ்களை அவ்வப்போது காண முடியும்.



ஆச்சர்யம் என்னவென்றால் ஃபார்வர்ட் மெசேஜ்களில் இருக்கும் விஷயங்கள் கூட நடக்காமல் போகும். ஆனால், இவை உண்மையாகவே வேலையைக் காட்டும். ஸ்பேம் என்றும் இதை கிளிக் செய்தால் மொபைலை வைரஸ் தாக்கிவிடும் என்பது போலவும் பல மெசேஜ்கள் வாட்ஸ்அப்பில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இது போன்ற சில மெசேஜ்களை கிளிக் செய்யும்போது உண்மையாகவே போன் ஹேங் ஆகும்.

இதுபோன்ற மெசேஜ்கள் உண்மையாகவே வைரஸ்தானா?

கடந்த சில நாள்களாக வாட்ஸ்அப்பில் ஒரு மெசேஜ் வைரலாகப் பரவி வருகிறது. " I can hang your WhatsApp for a while just touch below message" என்றும் அதற்கு அடுத்ததாகக் கீழே "don't-touch-here" என்றும் அதில் இருக்கிறது. அதை க்ளிக் செய்தால் மொபைல் அப்படியே ஹேங் ஆகி நிற்கிறது. 

இதுபோல தொடக்கத்தில் இருந்தே பல மெசேஜ்கள் வாட்ஸ்அப்பில் வந்து கொண்டிருக்கின்றன. இவை உண்மையாகவே வைரஸ்தானா என்று பார்த்தால் நிச்சயமாக இல்லை. அதுவும் வாட்ஸ்அப்களில் அனுப்பப்படும் சாதாரண மெசேஜ்கள் போன்றவைதான்.

ஆனால், சிக்கலான முறையில் மாற்றியமைக்கப்பட்டவை. அவைப் பார்ப்பதற்கு சில வார்த்தைகளாகத் தோன்றினாலும் அவற்றின் பின்னால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறியீடுகள் மறைந்திருக்கும்.


அதை சாதாரணமாக வாட்ஸ்அப்பில் பார்க்க முடியாது. வாட்ஸ்அப் போன்ற ஆப்களின் மென்பொருளில் இருக்கும் சில பிழைகளை இதுபோன்ற மெசேஜ்களை உருவாக்குபவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். குறியீடுகளோ வார்த்தையோ குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு அதிகமானால், அதை ரீட்(Read) செய்வதற்கு மொபைலுக்கு சில நொடிகள் அதிகமாகத் தேவைப்படலாம் .



 சிங்கிள் கிளிக்கில் ஆயிரக்கணக்கான எழுத்துகளை மொபைல் ரீட் செய்ய முயலும்போது ஏற்படும் விளைவுதான் சில நொடிகளுக்கு ஹேங் ஆகி நிற்பது. இதுபோன்ற ஸ்பேம் மெசேஜ்களை உருவாக்குவதற்கென தனியாக இணையதளங்களும், ஆப்களும் இருக்கின்றன. 

இதன் மூலமாக ஒரு பத்து எழுத்துகள் கொண்ட வார்த்தைகளுக்குப் பின்னால் ஆயிரக்கணக்கான எழுத்துகளை(Characters) புகுத்தி விட முடியும். இதை உருவாக்குபவர்கள் விளையாட்டுத்தனமாக இதுபோல மெசேஜ்களைத் தயார் செய்து பரவ விடுகிறார்கள்.


இதை கிளிக் செய்தால் மொபைலுக்கு ஏதாவது ஆகி விடுமோ சிலர் பயப்படுவார்கள். ஆனால், அப்படிப் பயப்படும் அளவுக்கு இதில் ஒன்றும் இல்லை என்பதுதான் விஷயம். அதையும் மீறித் தெரிந்தோ தெரியாமலோ இதுபோன்ற மெசேஜ்களை கிளிக் செய்துவிட்டாலும் கூட மொபைல் சில வினாடிகள் ஹேங் ஆகி நிற்கும். அதன் பிறகு சாதாரண நிலைக்கு வந்து விடும் அவ்வளவுதான். 

வேறு எந்த பாதிப்புகளும் இதனால் ஏற்படாது. ஆண்ட்ராய்டில் மட்டும்தான் என்றில்லை. ஐஒஸ்-ஸிலும் கூட இந்தப் பிரச்னை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. சில மாதங்களுக்கு முன்னர் ஒரே ஒரு தெலுங்கு எழுத்து ஐபோன்களில் சிக்கலை ஏற்படுத்தியது. அந்த எழுத்தை ஒருவருக்கு அனுப்பினால் அதைத் திறந்து படிக்கும் முன்பே ஐபோன் கிராஷ் ஆனது. 


பின்னர் ஒரு அப்டேட் மூலமாக அந்தப் பிரச்னை சரி செய்யப்பட்டது. இதுபோல மெசேஜ்களால் மொபைல் ஹேங் ஆகாமல் தடுப்பது எப்படி என்ற கேள்வி பலருக்குத் தோன்றலாம் அதற்கும் ஒரு வழி இருக்கிறது
'மெசேஜை பார்த்தவுடன் அழித்து விடவும்'.

Comments