மொபைல் போன் சிம்கார்டு வாங்க இனி ஆதார் வேண்டாம்: மத்திய அரசு உத்தரவு
மொபைல் போன் சிம்கார்டு பெற ஆதார் எண் தர வேண்டும் என கட்டாயப்படுத்தக் கூடாது என தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.இந்திய குடிமக்கள் அனைவருக்கும் அவர்களது சொந்த அடையாளங்கள் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய ஆதார் அட்டை வழங்கப்பட்டு வருகிறது.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் சார்பில் வழங்கப்படும் இந்த அட்டையை பல்வேறு மானிய திட்டங்களுக்கு மத்திய அரசு கட்டாயமாக்கி வருகிறது.மத்திய அரசு சார்பில் அமல்படுத்தப்படும் சமூக நலத் திட்ட சலுகைகளைப் பெற ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.
வங்கி கணக்கு, மொபைல் சேவைகளைப் பெற ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டுள்ளது.இதை எதிர்த்தும் ஆதார் திட்டம் மற்றும் ஆதார் சட்டம் 2016-ஐ எதிர்த்தும் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தனிநபர் சுதந்திரம் அடிப்படை உரிமைதான் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள பின்னணியில், ஆதார் வழக்கை விசாரிக்க வேண்டும் என்று மனுதாரரர்கள் தரப்பில் கோரப்பட்டுள்ளது.
இந்நிலையில், மொபைல் போன் ‘சிம்’ கார்டு வாங்க ஆதார் எண் அவசியம் என தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வற்புறுத்தி வருவதாக புகார் கூறப்படுகிறது. இதனையடுத்து சிம்கார்டு வழங்குவதற்கான வழிகாட்டும் நெறிமுறைகள் தொடர்பாக, மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி. மொபைல் போன் சிம் கார்டு வாங்க ஆதார் எண்ணை அளிக்குமாறு வாடிக்கையாளர்களை கட்டாயப்படுத்தக் கூடாது. ஆதார் எண் அளிக்காவிட்டாலும் சிம் கார்டு வழங்கலாம். அதற்கு பதிலாக அடையாள சான்றாக ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட பிற சான்களை பெற்று சிம்கார்டு வழங்காலம். இந்த விதிமுறைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment