தேர்வில் தோல்வி அடைந்த மகன்: பார்ட்டி வைத்து பட்டாசு வெடித்துக் கொண்டாடிய தந்தை

மகன் தேர்வில் தோல்வி அடைந்ததால் சொந்தங்களை அழைத்து பார்ட்டி வைத்து கொண்டாடியுள்ளார் வட மாநிலத்தில் ஒரு தந்தை. மகன் சோர்ந்து போகாமல் இருக்க உற்சாகப்படுத்த இவ்வாறு செய்ததாகத் தந்தை கூறியுள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் வசிப்பவர் சுரேந்திரகுமார் வியாஸ் (40). கட்டிட காண்டிராக்டர் தொழில் செய்து வருகிறார். இவரது அன்பு மகன் அன்ஷு (15) அங்குள்ள பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். பொதுத்தேர்வு எழுதிவிட்டு முடிவுக்காகக் காத்திருந்தார்.

நேற்று முன் தினம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியானது. இதில் எதிர்பாராத விதமாக மாணவர் அன்ஷு தோல்வி அடைந்தார். இதனால் அன்ஷூ வேதனையடைந்தார். தந்தை என்ன சொல்வாரோ, சொந்தக்காரர்கள் என்ன சொல்வார்களோ என கலக்கம் அடைந்தார்.

பயத்துடனும், கவலையுடனும் தந்தை சுரேந்திரகுமாரை பார்க்கச் சென்றார். தந்தை கண்டிப்பாக திட்டுவார் என்று கலக்கத்துடன் இருந்த மகன் அன்ஷுக்கு தந்தையின் செயல் ஆச்சர்யத்தை ஊட்டியது. மகன் தேர்வில் தோல்வி அடைந்தது குறித்து எந்த உணர்வையும் வெளிப்படுத்தாத தந்தை சுரேந்திர குமார் மகன் அன்ஷுவை அருகில் அழைத்து தலையில் தடவி கட்டியணைத்துக் கொண்டார்.


அத்துடன் நில்லாமல் மகன் தேர்வில் தோல்வி அடைந்ததைக் கொண்டாடும் விதத்தில் தனது உறவினர்கள், நண்பர்கள், மகனுடன் படித்த நண்பர்கள் அக்கம் பக்கம் உள்ளவர்களை தனது வீட்டுக்கு அழைத்தார். அனைவருக்கும் தடபுடலாக விருந்து வழங்கினார். பட்டாசும் வெடித்தார். சுரேந்திர குமாரின் இந்தச் செயலை அனைவரும் வித்தியாசமாகப் பார்த்தனர். பைத்தியக்காரராக இருப்பாரோ என்று நினைத்தனர்.

ஆனால் அதன் பின்னர் சுரேந்திரகுமார் கூறியது அனைவரையும் சிந்திக்க வைத்தது. “எனது மகன் அன்ஷு அறிவாளி, பரீட்சைக்காக அவன் கடுமையாக உழைத்துப் படித்தான், தேர்வையும் சிறப்பாக எழுதினான். ஆனாலும், தேர்ச்சி பெறவில்லை. அவனது தோல்வியை நான் பெரிதாக கருதவில்லை. காரணம் தோல்வி என்பது நிலையானது அல்ல.

தேர்வுத் தோல்வி குழந்தைகளின் மனதை பெரிதும் கலங்கவைக்கும், அதை பெரிதாக எடுத்துக்கொண்டு வாழ்க்கையின் கடைசி முடிவைக்கூட நாடுவார்கள். அதற்கு நாம் இடம் தரக்கூடாது. பத்தாவது தேர்வு தோல்வி என்பது வாழ்க்கையின் கடைசி விஷயமல்ல. என் மகனை உற்சாகப்படுத்தவே இதைச் செய்தேன். இதன் மூலம் அடுத்த ஆண்டு அவன் கடினமாக உழைத்து வெற்றி பெறுவான்” என்று தெரிவித்துள்ளார்.


தனது தந்தையின் ஆதரவான உற்சாகமூட்டும் பதிலைக் கேட்டு நெகிழ்ச்சி அடைந்த மகன் அன்ஷு “நான் எனது தந்தையின் ஆதரவான செயலைப் போற்றுகிறேன். நன்றாக படித்து அடுத்த ஆண்டு கூடுதல் மதிப்பெண்களுடன் தேர்வி வெற்றி பெறுவேன்” என்று கூறியுள்ளார்.

தேர்வில் தோல்வி அடைந்தவுடன் திட்டி தீர்க்கும் பெற்றோர் மத்தியில் மகனுக்கு ஆதரவாக விருந்து வைத்து நம்பிக்கையூட்டும் விதத்தில் பேசிய தந்தையின் செயலால் இனி தனது வாழ்நாள் முழுவதும் அன்ஷு முழு முயற்சியுடன் படிப்பார். சுரேந்திர குமார் பெற்றோருக்கு ஒரு எடுத்துக்காட்டு என்றால் அது மிகையாகாது.

Comments