நீட்; தமிழக மாணவனின் தந்தை மரணத்திற்கு மத்திய அரசு , சிபிஎஸ்இ பொறுப்பு: கல்வியாளர்கள் கண்டனம்




எர்ணாகுளம் : நீட் தேர்வு எழுத எர்ணாகுளம் சென்ற மாணவனின் தந்தை இறந்ததற்கு அதீத மன உளைச்சலும், அலைக்கழிப்புமே காரணம் என்றும், இந்த மரணத்திற்கு மத்திய அரசு, சிபிஎஸ்இ நிர்வாகமும் பொறுப்பேற்க வேண்டும் என்றும் கல்வியாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் இன்று மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு நடந்து வரும் நிலையில், தமிழக மாணவர்களுக்கு கேரளா, ராஜஸ்தான் மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டதற்கு தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு எதிர்ப்புகள் எழுந்துவந்தன.

இந்த நிலையில், நீட் தேர்வு எழுத இன்று திருத்துறைப்பூண்டியில் இருந்து எர்ணாகுளம் சென்ற மாணவன் கஸ்தூரி மகாலிங்கத்தின் தந்தை கிருஷ்ணசாமி, மாணவனை தேர்வு மையத்திற்கு அனுப்பிய பின்பு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த விவகாரம் தமிழகத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கல்வியாளர் ராஜராஜன் திட்டமிட்ட சதி இதுதொடர்பாக கல்வியாளர் ராஜராஜன் பேசுகையில், இந்த மரணத்திற்கு மத்திய மாநில அரசுகளே முழு காரணம். தமிழகத்தில் மற்ற தேர்வுகள் அனைத்தும் நடைபெறும் போது, நீட் தேர்வுக்கான மையங்களை இங்கு அமைக்க முடியாதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இது திட்டமிட்ட சதி என்றும், அதீத மன உளைச்சலும், அதிகாரிகளும் அலைக்கழிப்புமே மாணவனின் தந்தை மரணத்திற்கு காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.



கல்வியாளர் சோமசுந்தரம் மன உளைச்சலே காரணம்
கல்வியாளர் சோமசுந்தரம் பேசுகையில், தமிழ்நாட்டில் தேர்வு நடத்த தகுதியான இடங்கள் இருந்தும், தமிழக மாணவர்களுக்கு எர்ணாகுளம், கொல்லம், ஜெய்ப்பூர் என வேண்டுமென்றே மையங்கள் ஒதுக்கியது தமிழக மாணவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கும் செயல். இனியும் வருங்காலங்களில் இதுபொன்று மத்திய அரசு செயல்பட்டால், அது பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டுள்ளார்.



கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி மத்திய அரசும், சிபிஎஸ்இ காரணம்
கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறுகையில், மாணவனின் தந்தை கிருஷ்ணசாமியின் மரணத்திற்கு மத்திய அரசும், சிபிஎஸ்இ நிர்வாகமுமே பொறுப்பு ஏற்கவேண்டும். மற்ற மாநில மாணவர்களுக்கு அந்தந்த மாநிலத்தில் மட்டுமே தேர்வெழுத மையங்கள் ஒதுக்கிய சிபிஎஸ்இ நிர்வாகம் திட்டமிட்டு தமிழகத்தை வஞ்சித்துள்ளது. 10ம் வகுப்பு, 12 வகுப்பு தேர்வுகளை முறையாக நடத்த முடியாத சிபிஎஸ்இ நிர்வாகம் எப்படி நீட் தேர்வை நடத்தும். அரசும், அதிகாரிகளின் அலட்சியமுமே காரணம் என்று தெரிவித்துள்ளார்.



பாமக வழக்கறிஞர் பாலு  தமிழ் மக்களின் உரிமை பாமக வழக்கறிஞர் பாலு பேசும்போது, இந்த மாணவனின் தந்தையின் மரணத்தை எந்த விதத்திலும் ஈடுசெய்ய முடியாது. வெளிமாநிலத்தில் நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர்கள் அனைவருமே கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். தமிழகத்தின் கல்வி உரிமை பறிபோகிறது என்பதை இந்த மரணம் சுட்டிக்காட்டுகிறது. இதற்கு மத்திய மாநில அரசுகள் பதில் சொல்லியே ஆகவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்