ஐஏஎஸ் தேர்வில் முதலிடம் பிடித்தது எப்படி? அனுதீப்பின் அனுபவங்கள் #BBCExclusive

யு.பி.எஸ்.சி 2017ஆம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளை அறிவித்துள்ளது. இந்த முறை 990 மாணவர்கள் குடிமைப் பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஐதராபாத்தை சேர்ந்த அனுதீப் துரிஷெட்டி சிவில் சர்வீஸ் தேர்வுகளில் முதலிடத்தை பிடித்துள்ளார்.




ஐஏஎஸ் தேர்வில் முதலிடம் பிடித்த அனுதீப்பின் வெற்றிக்கதைISHETTY

பிபிசி சந்தித்தபோது அனுதீப் தன்னுடைய வெற்றிக்கதையை பகிர்ந்து கொண்டார்.
"மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன், மிகப்பெரிய பொறுப்பு எனக்காக காத்துக் கொண்டிருக்கிறது. நான் முதலிடம் பெற்றதைவிட என் எதிரில் இருக்கும் பொறுப்புகளே பெரிதாக தெரிகிறது. எனக்கு உறுதுணையாக இருந்த குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்."
"கடின உழைப்பின் அடிப்படையில் மட்டுமே இந்த இடத்தை பிடித்திருக்கிறேன், உழைப்புக்கு எந்த ஒரு மாற்றும் இல்லை" என்கிறார் அனுதீப்.
"நாம் எதைச் செய்தாலும் சரி, அது விளையாட்டாக இருந்தாலும்கூட நமது இலக்கு எப்பொழுதும் சிறப்பானதை அடைய வேண்டும் என்பதாகவே இருக்கவேண்டும். இதை என் தந்தையிடமிருந்து கற்றுக்கொண்டேன், தேர்வுகளுக்கு தயார் செய்யும்போதும் என் தந்தையின் மந்திரத்தையே பின்பற்றினேன்" என்று விளக்குகிறார் அனுதீப்.
சரித்திரம், சுயசரிதை புத்தகங்களை படிப்பதற்கு மிகவும் பிடிக்கும் என்று சொல்லும் அனுதீப், அமெரிக்காவின் அதிபராக பதவி வகித்த ஆப்ரகாம் லிங்கனின் ஆளுமை தமக்கு மிகவும் பிடித்தமானது என்று சொல்கிறார்.

ஐஏஎஸ் தேர்வில் முதலிடம் பிடித்த அனுதீப்பின் வெற்றிக்கதைபடதTTY

"ஆபிரகாம் லிங்கன் எப்பொழுதும் எனக்கு உத்வேகம் அளிக்கும் தலைவராகவே திகழ்கிறார். பல தலைவர்களுக்கு முன்மாதிரியாக விளங்கும் அவர், மிகவும் கடினமான சூழ்நிலைகளில் சவால்களை எதிர்நோக்கி வெற்றி பெற்று தனது நாட்டை வழிநடத்தி சென்றவர்" என்கிறார் அனுதீப்.
சிவில் சர்விஸ் தேர்வுகளுக்கு தான் தயார் செய்ததை பற்றி விரிவாக விளக்கியபோது. "இது மிகவும் கடினமான தேர்வு. ஏனெனில் தகுதி வாய்ந்த பலர் அதற்காக பயிற்சி பெற்று வருகின்றனர். தற்போது வெளியிடப்பட்டுள்ள தேர்ச்சி பட்டியலில் தகுதிவாய்ந்தவர்களில் சிலரின் பெயர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளது, விடுபட்டவர்களில் பலர் திறமையானவர்கள் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். தினசரி எத்தனை மணிநேரம் படிக்கிறோம் என்பதைவிட என்ன படிக்கிறோம், எப்படி படிக்கிறோம் என்பது முக்கியம்" என்று கூறினார்.
2013ஆம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வுகளில் இந்திய வருவாய் சேவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் அனுதீப்.
"தற்போது ஐதராபாத்தில் வருவாய்துறை உதவி ஆணையராக பதவி வகிக்கிறேன், பணியில் இருக்கும் நேரத்தைத் தவிர மற்ற சமயங்களிலும், வார இறுதிகளிலும் தேர்வுகளுக்காக தயார் செய்துக் கொண்டிருப்பேன். எப்போதும் நமது முயற்சி சிறந்ததாக இருக்க வேண்டும், கடின முயற்சியும், தொடர் உழைப்பும் பலன் தருவது உறுதி" என்று தனது வெற்றியின் ரகசியத்தை சொல்கிறார் அனுதீப்.
வாசிப்பதில் ஆர்வம் கொண்ட அனுதீப்புக்கு கால்பந்து விளையாட்டிலும் ஆர்வம் அதிகம். சிறுவயதில் இருந்தே கால்பந்து விளையாடுவதிலும், கால்பந்து போட்டிகளை பார்ப்பதில் விருப்பம் கொண்டவர் அவர்.
"கால்பந்து எப்போதும் என் வாழ்வின் ஓர் அங்கமாகவே இருந்தது, நான் மிகவும் நன்றாக கால்பந்து விளையாடுவேன். மன அழுத்தம் ஏற்பட்டால் அதை குறைக்க கால்பந்து விளையாடுவேன். கதை புத்தகங்கள் படிக்கவும் எனக்கு பிடிக்கும். கற்பனைக் கதைகளை அதிகம் படித்ததில்லை, ஆனால் உண்மையான விஷயங்கள் தொடர்பான புத்தகங்களை படிப்பேன்" என்கிறார் அவர்.

ஐஏஎஸ் தேர்வில் முதலிடம் பிடித்த அனுதீப்பின் வெற்றிக்கதைபடத்தY

கல்வி துறையில் பணியாற்ற விரும்பும் அனுதீப்
"நேரம் கிடைக்கும் போதெல்லாம், விளையாடுவேன் அல்லது படிப்பேன். அனைவருக்கும் ஒரு பொழுதுபோக்கு இருக்க வேண்டியது அவசியம் என்று நினைக்கிறேன். இவை நமது மன அழுத்தத்தை போக்குவதோடு, நம்மை வலிமையாக்குகிறது. எனது பொழுதுபோக்கு என்னை உருவாக்கியிருக்கிறது என்றே கூறுவேன்" என்கிறார் அவர்.
அனுதீப்பின் குடும்பத்திற்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுத்திருக்கும் இந்த செய்தியை கேட்டதும் குடும்பத்தினரின் மறுமொழி எப்படி இருந்தது? "இந்த செய்தியை கேட்டபிறகு, அம்மாவின் கண்களில் இருந்து ஆனந்த கண்ணீர் வழியத் தொடங்கியது, அப்பாவுக்கோ அதை இன்னும்கூட நம்ப முடியவில்லை, அது மிகவும் மகிழ்ச்சியான தருணம், என்னாலும் நம்ப முடியவில்லை. அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று மகிழ்ச்சியுடன் கூறினார் அனுதீப்.
தனக்கு வழங்கப்படும் எந்த வேலையையும் செய்யத் தயாராக இருக்கும் அனுதீப், கல்வி துறையில் பணிபுரிவது தனது முதல் தெரிவு என்று சொல்கிறார்.
கல்வி பற்றி விரிவாக பேசும் அனுதீப், "உலகின் வளர்ந்த நாடுகளில், உதாரணமாக ஸ்காண்டிநேவிய நாடுகளில் கல்வி நிலை மிக உயர்ந்த நிலையில் உள்ளது, வலுவான கல்வி முறையே அவர்களின் வளர்ச்சிக்கான ஆணிவேர்" என்று சொல்கிறார்.
“நாம் புதிய மேம்பட்ட இந்தியாவை உருவாக்க விரும்பினால், நமது கல்வி முறையை மேம்படுத்த வேண்டும். அதற்கான திசையில் வேலை செய்ய வேண்டும். என்னுடைய வளர்ச்சி பயணத்தில் நாட்டிற்கான பங்களிப்பை ஏதாவது ஒருவகையில் வழங்க விரும்புகிறேன் " என்று அவர் குறிப்பிடுகிறார்.

ஐஏஎஸ் தேர்வில் முதலிடம் பிடித்த அனுதீப்பின் வெற்றிக்கதைபடத்தின் காப்புரிTTY

தெங்கானாவின் கிராமத்தை சேர்ந்தவர் அனுதீப்
தனது வெற்றியின் பின்னணியில் இருப்பது தனது தந்தைதான் என்று உறுதியாக கூறுகிறார் அனுதீப். "அப்பாதான் எனக்கு முன்மாதிரியாக இருக்கிறார், தெலங்கானாவில் உள்ள தொலைதூர கிராமத்தை சேர்ந்த என் தந்தை கடினமாக உழைத்து முன்னேறியவர். அவருடைய உழைப்புதான் எனக்கு சிறந்த கல்வியை தந்தது. வேலையில் கடினமாக உழைப்பதோடு, உயர் தரத்தையும் கடைப்பிடித்து வரும் என் அப்பாவைப் போல இருக்கவே நான் ஆசைப்படுகிறேன்" என்று சொல்கிறார் இந்த கடின உழைப்பாளி.
தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி யிருப்பச் செயல் - என்ற திருக்குறளுக்கு ஏற்ப அனுதீப்பின் தந்தை கடின உழைப்பினால், கற்றவர் கூட்டத்தில் முந்தியிருக்கும்படியாக மகனை கல்வியில் மேம்படச் செய்தால், மகனோ,
ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய் - என்று பெற்றவர்களை பெருமை கொள்ள செய்திருக்கிறார்.

Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்