ஜூன் 1-ம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும்" - பள்ளி கல்விதுறை இயக்குனர் இளங்கோவன் அறிவிப்பு
'கோடை விடுமுறை முடிந்து, ஜூன், 1ல், மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது, பள்ளி வளாகத்தை துாய்மையானதாகவும், நேர்த்தியானதாகவும், தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்' என, பள்ளி தலைமை ஆசிரியர்களை, பள்ளிக்கல்வி இயக்குனர் இளங்கோவன் அறிவுறுத்தி உள்ளார்.
அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
கோடை விடுமுறை முடிந்து, ஜூன், 1ல், அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட உள்ளன. அன்று, மாணவர்கள், பள்ளிக்கு வரும்போது, பள்ளி வளாகம் துாய்மையானதாகவும், நேர்த்தியானதாகவும், கற்கும் சூழலுக்கு ஏற்ற வகையிலும், தயார் நிலையில் இருக்க வேண்டியது அவசியம்.
அதற்கேற்ப, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், பள்ளி வளாகத்தை தயார்படுத்த வேண்டும். பள்ளிகளில் உள்ள தண்ணீர் தொட்டிகள் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளை, கிருமி நாசினி பயன்படுத்தி, துாய்மையாக பராமரிக்க வேண்டும். கழிப்பறைகள் அனைத்தையும் சுத்தம் செய்ய வேண்டும். பழுது இருந்தால், சரி செய்ய வேண்டும்.
மாணவர்களின் எண்ணிக்கைக்கு தகுந்த வகையில், குடிநீர் குழாய், கழிவறைகள் இருக்க வேண்டும். குறைவாக இருந்தால், கூடுதலாக அமைக்க வேண்டும்.பள்ளி வளாகத்தில், புதர், கற்குவியல் மற்றும் கழிவுப் பொருட்கள் இல்லாதபடி, துாய்மையாக வைத்திருக்க வேண்டும். பள்ளங்கள் இருந்தால், அவற்றை மூட வேண்டும்.
கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, கழிவுநீர் தொட்டி ஆகியவற்றை, முறையாக மூட வேண்டும். வகுப்பறைகளில் மின் விசிறிகள், மின் விளக்குகள் பழுதடைந்திருந்தால், அவற்றை பழுது நீக்க வேண்டும். பள்ளி கட்டடங்களில், பழுது இருந்தால் சரி செய்ய வேண்டும். பள்ளி திறக்கும் நாளன்றே, ஆசிரியர்கள் மற்றும் வகுப்புகளுக்கான, கால அட்டவணை வழங்கப்பட வேண்டும்.இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Comments
Post a Comment