சங்கங்களுக்குள் எழுந்த நீயா? நானா? என்ற 'ஈகோ' மோதல் ?- 1200 அரசுப்பள்ளிகளில் H.M பணியிடம் காலி

தமிழ்நாடு முழுவதும் கிராமப்புறங்களில் உள்ள 1200 அரசு உயர்நிலைப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், ஏழை மாணவர்களின் கல்வி நலன் முற்றிலும் பாதிக்கப்படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

ஆசிரியர் சங்கங்களுக்குள் எழுந்த நீயா? நானா? என்ற 'ஈகோ' யுத்தத்தால், உயர்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக சிக்கல் நீடிக்கிறது.

கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகுதிகளில் அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் தமிழக பள்ளிக்கல்வித்துறை சுணக்கம் காட்டுவது ஒருபுறம், ஆசிரியர்களின் விருப்பமின்மை மற்றொருபுறம் என மாணவர்களின் கல்வி நலன் அடியோடு முடங்கும் அபாயம் உருவாகியுள்ளது.எதனால் இந்த சிக்கல்? என்பது குறித்து தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க (டிஎன்பிபிஜிடிஏ) மாநிலத் தலைவர் பொன்.செல்வராஜ் நம்மிடம் விரிவாக பேசினார்.

''உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தும் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் பதவி உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்களைக் கொண்டு நிரப்பப்படுகிறது. 1978ம் ஆண்டு மேல்நிலைப்பள்ளி தொடங்கப்பட்டது முதல் 38 ஆண்டுகளாக இதே நடைமுறைதான் அமலில் இருந்து வந்தது.


ஆனால் சில ஆசிரியர் சங்கங்கள் உள்நோக்கத்துடன் இந்த நடைமுறையை மாற்றி அமைக்கக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. அவர்கள் பெற்ற தடை ஆணையை சட்டப்பூர்வமாக உடைத்தோம். பிறகு மற்றொரு சங்கத்தினர் மதுரை உயர்நீதிமன்றத்தில் இதே பிரச்னையை வலியுறுத்தி வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் தீர்ப்பு, தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

பட்டதாரி ஆசிரியருக்கோ அல்லது பதவி உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியருக்கோ தலைமை ஆசிரியர் பணி என்பது பதவி உயர்வு அல்ல. அது ஓர் அங்கீகாரம். நிர்வாகப் பொறுப்புக்கு வருகின்றனர். அவ்வளவுதான். இத்தனைக்கும் பணப்பலன்கூட பெரிதாக இல்லை.

பட்டதாரி ஆசிரியராக இருந்து முதுகலை பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஆகிவிடுகிறது. அதேநேரம், நேரடியாக முதுகலை ஆசிரியராக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் பணிமூப்புடன் ஒப்பிடுகையில், எங்களுடைய பத்தாண்டு கால பட்டதாரி ஆசிரியர் பணி அனுபவம் கணக்கில் கொள்ளப்படுவதில்லை.

சார்நிலை பணியாளர்கள் விதி 9, 'ஒரு துறையில் இருந்து வேறு ஒரு துறைக்குச் சென்று பணியாற்றும் ஊழியர்கள், 5 ஆண்டுகளுக்கும் மேல் அந்த துறையில் பணியாற்றும் நேர்வில் தாய்த்துறையில் பதவி உயர்வு பெற, ஓராண்டு காலம் தாய்த்துறைக்கே திரும்பி வந்து பணியாற்ற வேண்டும்' என்று சொல்கிறது.

இதற்குக் காரணம், தாய்த்துறையில் இருந்து வேறு துறைக்குச் சென்று நீண்ட காலம் பணியாற்றியதால், தாய்த்துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை அறிந்து கொள்வதற்காக இவ்வாறு விதி வகுக்கப்பட்டு உள்ளது. இந்த விதியை சுட்டிக்காட்டித்தான் சில சங்கங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.


இந்த விதி ஆசிரியர்களுக்குப் பொருந்தாது. ஏனெனில், நாங்கள் பணியில் சேர்ந்ததும், பதவி உயர்வில் செல்வதும் பள்ளிக்கல்வித்துறை என்ற ஒரே துறையில்தான். அதோடு, ஆசிரியர் பணியில்தான் தொடர்கிறோம். இந்த விதியை தமிழக அரசும், பள்ளிக்கல்வித்துறையும் கூட இன்னும் சரியாக புரிந்து கொள்ளவில்லை.

கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பதவி உயர்வுபெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், முழு தகுதி இருந்தும் தலைமை ஆசிரியர் பணி வாய்ப்பு கிடைக்காமலேயே ஓய்வு பெற்று விட்டனர்.

இந்த சர்ச்சை காரணமாக, தமிழ்நாடு முழுவதும் மொத்தம் உள்ள 3056 அரசு உயர்நிலைப்பள்ளிகளில் சுமார் 1200 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் இரண்டு ஆண்டுகளாக காலியாக உள்ளன. இதனால், மூத்த பட்டதாரி ஆசிரியரை பொறுப்பு தலைமை ஆசிரியராக நியமித்து பள்ளியை நிர்வாகம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான பள்ளிகளில், தலைமை ஆசிரியரையே சக ஆசிரியர்கள் மதிக்க மாட்டார்கள் எனும்போது, 'இன்சார்ஜ்' தலைமை ஆசிரியரை எப்படி மதிப்பார்கள்?

தலைமை ஆசிரியர் காலியிடங்கள் பெரும்பாலும் கிராமப்புற பள்ளிகளில்தான் அதிகமாக இருக்கின்றன. தலைமை ஆசிரியரின் நிர்வாகம் இல்லாததால், அப்பள்ளி மாணவர்களின் கல்வி நலனும் பாதிக்கப்பட்டு உள்ளது. கிராமப்புற பள்ளிகளில் தேர்ச்சி விகிதமும் குறைந்து விட்டது.

பிளஸ்-1 பொதுத்தேர்வு, நீட் நுழைவுத்தேர்வு, புதிய பாடத்திட்டம், வினாத்தாள் மாற்றம் என பல சவால்கள் உள்ள நிலையில், தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பது மாணவர்களின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல. தமிழக அரசும் இப்பிரச்னையில் கவனம் செலுத்தாமல் ஏனோதானோ என்று இருப்பது வருத்தம் அளிக்கிறது,'' என்கிறார் செல்வராஜ்.


சேலம் மாவட்ட நிலவரம் குறித்து ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், ''சேலம் மாவட்டத்தில் அரகுள்ளம்பட்டி, அத்தனூர்பட்டி, நாகலூர், வெள்ளக்கடை, மாதையன்குட்டை, பரநாட்டாமங்கலம், கொங்குபட்டி, புக்கம்பட்டி, உலிபுரம், சார்வாய்ப்புதூர், புளியங்குறிச்சி, அக்கமாபேட்டை, வளையசெட்டிப்பட்டி, ராமிரெட்டிப்பட்டி, தமையனூர், தாண்டானூர் உள்ளிட்ட பல்வேறு கிராமப்புற பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடம் இரண்டு ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளது.

பட்டதாரி ஆசிரியர் ஒருவர், முதுகலை ஆசிரியர் பணி அனுபவத்தோடு உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியராக சென்றால் 9 மற்றும் 10ம் வகுப்பு அளவிலேயே மாணவர்களை சிறப்பாக தயார் செய்ய இயலும். பள்ளிக்கல்வித்துறை 38 ஆண்டுகளாக கடைப்பிடித்து வந்த நடைமுறை, இப்போதைய மாறிவரும் சூழ்நிலைக்கும் பொருந்துவதாக அமைந்துள்ளது,'' என்றார்.

Comments

  1. மாற்று சங்கத்தின் கருத்தையும் சேர்த்து வெளியிட்டால் தானே அனைவருக்கும் உண்மை தெரியும். இது ஒரு சார்புச் செய்தி

    ReplyDelete
  2. High school hm promotion only for bt cader and promotion pg asst is transfer of post no one right to claim hm post expect the aboyve two persons

    ReplyDelete
  3. If direct pgts are allowed to go as hshm all problem will be solved.

    ReplyDelete

Post a Comment