10ம் வகுப்பு மறுகூட்டல் தேதி 3 மாவட்டத்துக்கு ஒத்திவைப்பு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பிரச்னை காரணமாக 3 மாவட்டங்களில் இணைய வசதி ரத்து செய்யப்பட்டதால் அந்த மாவட்ட மாணவர்கள் 10ம் வகுப்பு மறுகூட்டல் செய்வதற்கான தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் வசுந்தராதேவி வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த மார்ச் 16ம் தேதி முதல் ஏப்ரல் 20ம் வரை நடந்த பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து விடைத்தாளின் மதிப்பெண்களை மறுகூட்டல் செய்ய விரும்பும் மாணவர்கள் 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணைய தள வசதி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த மாவட்டங்களில் 144 தடை சட்டம் அமலில் உள்ளது. அதனால் மேற்கண்ட 3 மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவியர் பத்தாம் வகுப்பு தேர்வு மறுகூட்டல் செய்ய முடியாத நிலை உள்ளது. 

அந்த மாவட்டங்களில் இயல்பு நிலை திரும்பிய அடுத்த நாளில் இருந்து 3 நாட்களுக்குள் மாணவ, மாணவியர் விண்ணப்பிக்க வாய்ப்பு தரப்படும். அதற்கான தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Comments