இளையராஜா, ரஹ்மான் குறித்து பிளஸ் 1 வகுப்பில் தமிழ் பாடம்

பிளஸ் 1 புதிய பாடப் புத்தகத்தில், இசையமைப்பாளர்கள் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் பற்றிய பாடம் இடம்பெற்றுள்ளது.
ஜல்லிக்கட்டு குறித்தும், 'வாடி வாசல்' என்ற தலைப்பில், புதிய பாடம் சேர்க்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில், 13 ஆண்டுகளுக்கு பின், ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கு, புதிய பாட புத்தகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.


இதில், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 ஆகிய வகுப்புகளுக்கு மட்டும், வரும் கல்வி ஆண்டில், புதிய பாடப்புத்தகங்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன. அதில், பிளஸ் 1 தமிழ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள பாடங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. பொது தமிழ் என்ற, பிளஸ் 1 புத்தகத்தில், 'இசைத் தமிழர் இருவர்' என்ற தலைப்பில், ஒரு பாடம் உள்ளது.

'சிம்பொனி தமிழர்' என்ற பெயரில், திரைப்பட இசை அமைப்பாளர், இளையராஜா குறித்தும், 'ஆஸ்கர் தமிழர்' என்ற பெயரில், ஏ.ஆர்.ரஹ்மான் குறித்தும் தகவல்கள் இடம் பெற்றுள்ளன. மேலும், கவிஞர் அப்துல் ரஹ்மான் எழுதிய, ஜப்பானிய வகை கவிதை, பிரபஞ்சனின் சிறுகதை, புதுமைப்பித்தன் கவிதை என, நவீன இலக்கியத்திற்கு, அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய, 'யானை டாக்டர் கிருஷ்ணமூர்த்தி' குறித்த பாடமும் இடம்பெற்றுள்ளது. தமிழக கலாசாரம் மற்றும் நாகரிகத்தின் அடையாளமாக விளங்கும், ஜல்லிக்கட்டு குறித்து, 'வாடி வாசல்' என்ற தலைப்பில், ஒரு பாடம் இணைக்கப்பட்டுள்ளது. பொதுவுடைமையை வலியுறுத்திய ஜீவானந்தம், இயற்கை வேளாண்மை, சிந்துவெளி நாகரிகத்தில், தமிழ் பெயர் தாங்கிய ஊர்கள் குறித்த அம்சங்களும் உள்ளன.


தமிழர்களின் கல்வி வரலாறு, திண்ணைப் பள்ளி, தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் கட்டடக் கலை, குற்றால குறவஞ்சி நாடகம் போன்றவையும், இடம்பெற்றுள்ளன. இலங்கை, யாழ்ப்பாணத்தை சேர்ந்த எழுத்தாளர், வில்வரத்தினம் எழுதிய, 'யுகத்தின் பாடல்' என்ற கவிதையும், 'ஆறாம் திணை' என்ற தலைப்பில், எழுத்தாளர் முத்துலிங்கம் எழுதிய புதினமும், பாட புத்தகத்தில் சேர்க்கப்பட்டு உள்ளன.

Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்