மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை வைத்த பள்ளி மாணவர்கள்..!
தேனி மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்துக்கு அரசுப் பேருந்து வசதி கேட்டு பள்ளி மாணவர்கள், பள்ளிச் சீருடையுடன் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
இன்று (02.04.2018) காலை தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்புநாள் கூட்டத்திற்கு பள்ளிச்சீருடையில் 12-ம் வகுப்பு மாணவ மாணவிகள் வந்திருந்தனர். கோரிக்கை மனுவுடன் ஆட்சியரைச் சந்தித்து மனு கொடுக்க வரிசையில் நின்றிருந்தவர்களிடம் பேச்சுக்கொடுத்தோம். 'போடி தாலுகா, மீனாட்சிபுரம் அருகே உள்ளது எங்கள் கிராமம். பெயர், பொட்டல்களம். நாங்கள் அரசுப் பேருந்தை பார்த்ததே இல்லை. 15 வருடத்திற்கு முன்னர் தான் அரசுப் பேருந்து எங்க ஊருக்கு வந்துருக்கு. அப்புறம் இதுவரை வரவே இல்லை. எங்களுக்கு மீனாட்சிபுரத்தில் தான் ஸ்கூல். எங்க ஊருக்கும் மீனாட்சிபுரத்திற்கும் 4 கிலோமீட்டர். பள்ளியில் பஸ் பாஸ் கொடுத்தும் அரசு பேருந்து இல்லாததால் தினமும் 4 கிலோமீட்டர் நடந்து தான் ஸ்கூல்க்கு போறோம். எங்க ஊருக்கும் வந்துகிட்டு இருந்த அரசுப் பேருந்து, ஊருக்குள் வந்து திரும்புற இடத்தை ஒருவர் ஆக்கிரமிப்பு பண்ணிட்டார். அதனால பஸ் திரும்ப முடியாம போச்சு. இதனால், எங்க ஊருக்கு பேருந்து விடுறதே இல்லை. அவசரத்துக்கு, ஷேர் ஆட்டோ, தனியார் பஸ் பிடித்து ஸ்கூல்க்கு போவோம். ஆனால், தினமும் பஸ்க்கு மட்டும் 20 ரூபாய் செலவாகும். அதனால காலையில சீக்கிரமா எழுந்து 4 கிலோமீட்டர் நடந்தே ஸ்கூல்க்கு போவோம். எங்க ஊருக்கு எப்போ பஸ் விடப்போறிங்கனு கேட்க தான் ஆட்சியரைப் பாக்க வந்தோம்' என்றனர் எதார்த்தமாக. அதிகாரிகளிடம் பேசி உடனடி நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதியளித்தார்.
Comments
Post a Comment