அரசு பள்ளியை தாங்கிப் பிடிக்கும் பெற்றோர்!ஆசிரியரின் புது 'பார்முலா'வுக்கு வெற்றி!

மாணவர் சேர்க்கைக்காக பல அரசு பள்ளிகள், திண்டாடி வருகின்றன. பெற்றோரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது தான், தற்போதைய சவாலாக உள்ளது. இச்சூழலில், பெற்றோரே ஒரு பள்ளிக்காக, தாமாக முன்னின்று விளம்பரம் செய்வதாக, தகவல் வந்தது.

விசாரித்தபோது, உக்கடம், மீன் மார்க்கெட் பின்புறமுள்ள, ஒக்கிலியர்பாளையம், மாநகராட்சி தொடக்கப்பள்ளி என்பது தெரியவந்தது.பள்ளி முடிந்து ஒரு வாரம் கூட ஆகாத சூழலில், மாணவர் சேர்க்கைக்கு பெற்றோர் குவிகின்றனர். தனியார் பள்ளிக்கும், இப்பள்ளிக்கும் உள்ள ஒரே வித்தியாசம், சீருடை மட்டும் தான் என்கின்றனர், அப்பகுதி வாசிகள்.இவர்களின் வார்த்தைகளில் அடிக்கடி தவறாமல் இடம்பெற்ற பெயர், ஆசிரியர் கிறிஸ்டோபர் ஜார்ஜ். பரபரப்பாக விழிப்புணர்வு பணிகளுக்கு தயாராகி கொண்டிருந்தவரிடம் பேசியபோது...தொடக்கப்பள்ளி தான், கல்வியின் அடித்தளம். இங்கு சரியாக வழிநடத்தப்படுபவர்கள், எத்தகைய சூழலிலும், எதிர்நீச்சல் போடுவார்கள். வார்த்தையும், எழுத்தும் உச்சரிக்க தெரிந்தபின், மனப்பாடம் செய்விப்பது தவறு.புத்தகத்தில் உள்ளதை தாண்டி, என்ன கற்று கொடுக்கிறோம் என்பதில் தான், ஆசிரியரின் தனித்தன்மை வெளிப்படும். எனக்கு, தனித்துவமான ஆசிரியராக இருக்க வேண்டுமென்பதே விருப்பம். இதற்காக, வகுப்பு நிகழ்வுகள் முழுவதும், செயல்வழி கற்றலாக மாற்றி விட்டோம். இப்படி சொல்லி கொடுப்பது, ஆயுள் முழுக்க மறக்காது.எல்லா பாடங்களுக்கும், செயல்திட்டங்கள் தயாரித்துள்ளோம். இதை மாணவர்களே தயாரித்து, வகுப்பறையில் வைக்கின்றனர். கணிதத்தில் கொள்ளளவு என்ற பாடத்திற்கு, ஒரு லிட்டர், அரை லிட்டர் என அளவைகள் கொண்ட, பாட்டில்கள் சேகரித்து, எப்படி அளப்பது என்பதை சொல்லி கொடுக்கிறேன்.

குழுவாக பிரித்து, லிட்டர் அளவீடு குறித்து, வினாடி-வினா நடத்தப்படுவதால், மாணவர்கள் எளிதில் உள்வாங்கி கொள்கின்றனர். ஐந்தாம் வகுப்பு ஆங்கில பாடப்புத்தகத்தில், பட்டம் குறித்த பாடம் உள்ளது. இதை செய்யும் முறை குறித்து, மாணவர்களுக்கு விளக்கியதோடு, பட்டம் திருவிழாவை பள்ளியில் நடத்தினோம்.இதுபோன்ற செயல்பாடுகளை,பெற்றோர் அறிந்து கொள்ள மாதந்தோறும் கூட்டம் நடத்துகிறோம். பள்ளிக்கு விடுப்பு எடுக்காத மாணவர்களுக்கு, மாதந்தோறும் பரிசுகள் வழங்குகிறோம்.தலைமையாசிரியர் விசாலாட்சி,ஆண்டுவிழா, விளையாட்டு போட்டிகள், அறிவியல் கண்காட்சி நடத்துதல் உள்ளிட்ட பள்ளி சார் செயல்பாடுகளுக்கு,பள்ளி மேலாண்மை குழுவின் ஆலோசனைகளையும் பெறுகிறார்.

ஒரு பள்ளியின் வளர்ச்சியில், பெற்றோரின் பங்கும் இருந்தால், மாணவர் சேர்க்கை குறைய வாய்ப்பே இல்லைஎன்றார் ஆசிரியர் கிறிஸ்டோபர்.பெண்கல்வி குறித்த பொம்மலாட்ட நிகழ்ச்சிக்கு, மாணவர்கள் ஒத்திகை பார்த்து கொண்டிருந்தனர். பொதுக்கூட்டம் நடத்தி, மாணவர் சேர்க்கை அதிகரிப்பதற்கான, சிறுமுயற்சி என்ற ஆசிரியருக்கு, கைக்குலுக்கி விடைபெற்றோம்.

Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்

Google Maps! Latest Update for Bikers!