ஆசிரியர்கள் அனைவரும் படிக்க வேண்டிய "கண்டேன் புதையலை" என்ற புத்தகத்தின் நூல் விமர்சனம்




புத்தகம்: கண்டேன் புதையலை.
நூலாசிரியை: திருமதி.பிரியசகி

“இந்த உலகில்
 கஷ்டப்படுவோரும் அதிகம்…
கஷ்டப்படுத்துவோரும் அதிகம்…
அடுத்தவர் கஷ்டத்தைப் புரிந்து கொண்டு அதைத் தீர்த்து வைப்பவர்கள் மிகக் குறைவு… “
என எங்கோ படித்ததை இந்நூலாசிரியைக்குப் பொருத்திப் பார்க்கிறேன். கல்வியாளர் ஐயா.ச.மாடசாமி அவர்கள் தன் வாழ்த்துரையில், ‘தோற்றோருக்காகப் பேசுவோரும் எழுதுவோரும் முக்கியமானவர்கள். அதில் மிக முக்கியமானவர் இந்நூலாசிரியர் பிரியசகி என்கிற ஆனி பிளாரன்ஸ்’ என குறிப்பிட்டுள்ளார்.  தனது முந்தைய நூலான ‘கசக்கும் கல்வியும் கற்கண்டாகும்” என்பதிலும் சரி, இந்த நூலிலும் சரி தற்போதைய கல்வி என்னும் அமைப்பினுள் வெற்றியை ஈட்டாத குழந்தைகளிடம் தனது பரிவான  தனிக் கவனத்தைச் செலுத்துகிறார்.  வீட்டிலும், வீதியிலும், மேடையிலும், வகுப்பறையிலும், எங்கெங்கும்…  விலகி விடுபட்டுத் தனித்திருப்போரைத் தேடும் கண்; அவர்களைக் கூப்பிடும் குரல்; அவர்களை நேசிக்கும் இதயம்; அவர்களை நாடி நம்பிக்கையுடன் தழுவ வரும் கை என பிரியசகி அவர்கள் இந்நூலை மாணவர்கள் மீதான நேசத்தின்  அடிப்படையில் எழுதியுள்ளதை ச.மா அவர்கள் தனது வாழ்த்துரையில் குறிப்பிட்டுள்ளார். சக மனிதர்கள் மீதான நேசம், குறிப்பாக கல்வி என்னும் பெரும் பரப்பில் குறிப்பிட்ட இலக்குகளை அடைய முடியாத மாணவ, மாணவர்கள் மீதான அன்பும், பரிவுமே இந்நூலாக வெளிப்பட்டு நிற்கிறது.

நான் தினமும் பள்ளிக்கு ரயிலில் பயணிக்கும் ரயில் பயணி. இதில் பல ரயில் நண்பர்கள் உண்டு. இதில் வயதிலும், அனுபவத்திலும் மூத்த மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் ஒருநாள் என்னிடம் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டு வந்தார். அவர் 20 ஆண்டுகாலம் பட்டதாரி ஆசிரியராக இருந்தவர். பின் பதவி உயர்வில்  ஒரு உயர்நிலைப் பள்ளிக்கு தலைமை ஆசிரியராகச் செல்கிறார்.. ஒருவாரம் கடந்த நிலையில் ஒரு நாள் மாலை ஆறாம் வகுப்பு மாணவன் ஒருவன் தலைமை ஆசிரியர் அறையினுள் நுழைந்து பார்க்கிறான். நமது தலைமை ஆசியரியர் “ என்ன வேண்டும்?” என அந்தப் பள்ளி மாணவனிடம் கேட்க, “உங்கள் பேரென்ன?” என்கிறான் மாணவன். நமது ஆசிரியருக்கு சட்டென்று சிரிப்பு வந்து விடுகிறது. அவனை அருகே அழைத்து தனது பேரைச் சொல்கிறார். அவன் சென்றுவிட்டாலும் தலைமை ஆசிரியருக்கு ஒரே வியப்பு, “ பாரேன் கொஞ்சம் கூட பயம் இல்லாமல் கேட்பதை” என்று.  அடுத்த நாளும் அந்த மாணவன் வருகிறான், வந்து வணக்கம் சொல்கிறான், சென்று விடுகிறான்… ஒரு வாரம் இது தொடர்கிறது. அடுத்த வாரம் அவன் வரும்போது தலைமை ஆசிரியர் அறையில் இருக்கும் ஆங்கில செய்தித்தாளைப் புரட்டிப்பார்க்கிறான். இதைக் கவனித்த தலைமை ஆசிரியர் “பேப்பர் படிக்கனுமா?” என்கிறார். அம்மாணவன் “ம்” என்கிறான். “அப்போ பள்ளி விடும்போது வா! பேப்பரை எடுத்துக் கொண்டு வீட்டுக்குச் சென்றுப் படித்துவிட்டு நாளை காலை கொண்டு வந்து வைத்து விடு” என்கிறார். சரியென்று அன்றிலிருந்து தினசரி ஆங்கில செய்தித்தாளை வீட்டிற்கு எடுத்துச் சென்று அடுத்த நாள் பள்ளிக்கு கொண்டு வைப்பதை தொடர்கிறான் மாணவன். அவனது இந்த தொடர்ச்சியான செயல்பாடு கண்டு தலைமை ஆசிரியருக்கு அவன் மீது ஒரு பாசம் ஏற்படுகிறது. அந்த கல்வியாண்டு முடிவில் தலைமை ஆசிரியருக்கு மாறுதல் கிடைக்கிறது. எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பும்போது அந்த ஆறாம் வகுப்பு மாணவன் ஒரு ஓரமாய் நிற்கிறான். தலைமை ஆசிரியர் அவனை அழைத்து அவனிடம் பேச்சுக் கொடுக்கிறார், “ நல்லா படிக்கிறடா நீ… படிச்சு என்ன ஆகப்போற?” எனக் கேட்க “நான் டாக்டர் ஆவேன் சார்” என்கிறான். “டேய்… சூப்பர்டா.. நீ டாக்டராகும்போது சாருக்கெல்லாம் வயசாகி உடம்பு சரியில்லாம உன்கிட்ட வந்தால் சாருக்கு இலவசமா ஊசி போடுவியாடா?” எனக் கேட்கிறார். அதற்கு அந்த மாணவன் சொல்லிய பதில், “சார் உங்களுக்கு நோயெல்லாம்  வராது சார்!, நான் உங்களுக்காகவே சாகாத மருந்து கண்டுபிடிச்சிருவேன் சார்” . இதைக் கேட்டதும் நமது தலைமை ஆசிரியர் மெய்சிலிர்த்துப்பபோனதை சொல்லவும் வேண்டுமோ?. அவர் மட்டுமல்ல அவர் சொன்னதைக் கேட்டு நானும் மெய்சிலிர்த்துப் போனேன். இது வெறும் வார்த்தையல்ல. அம்மாணவன்  தலைமை ஆசிரியர் மேல் வைத்துள்ள பாசம், பிரியம்.

என்ன இது புத்தக அறிமுகம் என்று கதை சொல்லிக்கொண்டு இருக்கிறேன் என்று பார்க்கிறீர்களா? இதே போன்று ஒரு தலைமை ஆசிரியர்தான் இந்த நூலின் கதாநாயகனும். அவர் பெயர் அறிவொளி. வேலூர் மாவட்டத்தின் அடையாளமாக, நிறைய மாணவர்கள் ஒரு காலத்தில் படித்த பள்ளியாக இருந்து தற்போது மாணவர்களின் எண்ணிக்கையில் மிகப்பெரிய வீழ்ச்சியைப் பெற்றுள்ள ஒரு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிதான் கதைக்களம். நமது தலைமை ஆசிரியர் இந்தப் பள்ளியில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ளார். இவர் தமது பள்ளி எல்லாவகையிலும் சிறப்புற செயல்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். வந்தவுடன் பள்ளியில் நடந்த கூட்டத்தில் நூறாண்டு பெருமை கொண்ட இப்பள்ளியை  மேம்படுத்தும் உத்திகளுடன் சிறப்புரையாற்றுகிறார். சிலநாட்களில் தேர்வு வர தலைமை ஆசிரியர் ஒரு ஒரு வகுப்பாய் பார்த்துக் கொண்டு வருகிறார். அப்போது ஒரு வகுப்பில் கார்த்திக் என்ற மாணவனும் விஷ்ணு என்ற மாணவனும் தேர்வில் காப்பி அடித்தார்கள் என்று சொல்லி அந்த வகுப்பில் கண்காணிப்பாளராக உள்ள ஆசிரியர் ராஜாராம் தண்டனை வழங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு, அந்த மாணவர்கள் இருவரையும் தனது அறைக்கு அழைத்துச் செல்கிறார். அங்கு தொடங்கி தலைமை ஆசிரியர், மாணவர்கள் விஷ்ணு மற்றும் கார்த்திக்,ஆசிரியர் சந்தோஷ் மற்றும் சிறிது நேரமே உரையாடலில் வந்து போகும் ஆசிரியர் சந்தோஷின் மனைவி எழில் ஆகியோரிடையேயான கல்வி குறித்த உரையாடல் 36 தலைப்புகளில் இந்நூலாக விரிகிறது. நூலாசிரியர் தனது முந்தைய நூலான “ கசக்கும் கல்வியும் கற்கண்டாகும்” என்பதில் கற்றல் குறைபாட்டிற்கான பல்வேறு காரணங்களை உரையாடல் வழியாகவே அழகுற எடுத்துரைத்தார். இந்நூலிலும் அதே உரையாடல் உத்தியைப் பயன்படுத்தியுள்ளார். இந்த உத்தியின் மூலம் Howard Gardener எழுதி 1983 ல் வெளிவந்த நூலான Frames of mind – The theory of multiple intelligence மற்றும் David Lazear என்பவரின் Eight ways of knowing & Eight ways of teaching என்னும் நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள பல்முனை நுண்ணறிவுக் கோட்பாட்டின்( Multiple Intelligence Theory) ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் உள்ள எட்டு வகையான அறிவுத் திறன்களான,
1.மொழித்திறன் (Verbal/ Linguistic intelligence)
2.கணிதத் திறன் (Logical/ Mathematical Intelligence)
3.இடம் சார்ந்த காட்சித்திறன் (Visual/Spatial intelligence)
4.உடல் இயக்கத் திறன் (Body Kinesthetic intelligence)
5.இசைத்திறன் (Musical Intelligence)
6.பிறருடன் கலந்து பழகும் திறன் (Interpersonal intelligence)
7.தன்னைத் தான் அறியும் திறன் (Intra personal Intelligence)
8.இயற்கையோடு ஒன்றிக்கும் திறன் (Naturalistic Intelligence)
ஆகியவற்றினைப் பற்றியும், இந்நூல்களிலுள்ள முக்கியமான மையக்கருத்துக்களையும் மிக எளிய மொழியில் எல்லோருக்கும் புரியும் வண்ணம் மிக அழகாகத் தொகுத்துத் தந்துள்ளார். மேலும் இந்த எட்டு திறன்களில் ஒவ்வொன்றிலும்  புகழடைந்தவர்கள்(எ.கா. மொழித்திறன் – திருவள்ளுவர்,  கணிதத் திறன் – ராமானுஜர், இசைத்திறன் – இளையராஜா) பற்றி எடுத்துக்காட்டுக்களுடன் விளக்கி இருப்பது அருமை.
அறிவுத்திறன் என்பது நாம் வாழும் கலாச்சாரப் பின்னணியில் எழும் எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் திறன் என்பார் டாக்டர் . ஹோவர்ட் கார்ட்னர். ஆனால் இயல்பில் மேலே உள்ள எட்டு திறன்களையும் ஒருங்கே பெற்றவர்கள் என்பது  சாத்தியக்குறைவானது. பலர் ஓரிரு திறன்களில் மட்டுமே வல்லவராக இருக்கலாம். உதாரணமாக விளையாட்டு பிடித்தவர்களுக்கு படிப்பு பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் முயற்சி செய்தால், ஆர்வத்தை வளர்த்துக் கொண்டால் எந்த விதமான குடும்ப, கலாச்சாரப் பின்னணியிலும் எட்டு அறிவுத் திறன்களிலும் முன்னேற முடியும். ஆனால் அதிக முயற்சியின்றி பிறரைவிட சிறப்பாகச் செய்ய முடிகிறதோ அதுவே அவரது தனித்திறன் என்று புரிந்து கொள்ள வேண்டும். இப்பன்முக அறிவுத் திறன்களின் உதவியுடன் உலகத்தை உற்று நோக்கி, உட்கிரகித்துப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என தன் முன்னுரையில் குறிப்பிடுவதே இந்நூலின் நோக்கமாகும்.

இதில் நல்லாசானின் நற்குணங்கள் என்னும் கட்டுரையில் ஒரு நல்ல பென்சிலுக்கும், நல்லாசானுக்கும் இடையேயுள்ள ஒப்பீடு அருமை.

ஒரு பென்சில் மிகச்சிறந்த பென்சில் ஆவதற்கான ஐந்து வழிகள்:
1. பல உன்னதமான காரியங்களை உன்னால் சாதிக்க முடியும். ஆனால் அதற்கு நீ பிறருடைய கையில் இருக்க சம்மதிக்க வேண்டும்.
2. அவ்வப்போது நீ கூர்மைப்படுத்தப்படுவாய். அது வலி மிகுந்ததாயினும் நீ இன்னும் சிறந்த பென்சிலாக உதவும்.
3. நீ செய்த தவறுகளைத் திருத்திக்கொள்ள உன்னால் முடியும்.
4. உனக்குள்ளே என்ன உள்ளது என்பதைப் பொறுத்தே உன் தகுதி நிர்ணயிக்கப்படும் என்பதை மறந்து விடாதே.
5. எத்தகைய கடினமான சூழ்நிலை வந்தாலும் எழுதுவதை நிறுத்தி விடாதே. உன் காலத்திற்குப் பின்னும் நிலைத்து நிற்கக் கூடிய பதிவுகளை விட்டுச் செல்வதே நீ படைக்கப்பட்டதற்கான் நோக்கம்
அதைப்போல சிறந்த ஆசிரியராக விரும்புகிறவர்களும் இந்த ஐந்து வழிகளைப் பின்பற்றுவது நலம். மேலே உள்ள ஐந்து வழிகளுடன் ஆசிரியர் பணியையும் ஒப்பிடும்போது,
1. உங்கள் பணியில் முழு அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படும்போது உங்களாலும் மிகப்பெரிய காரியங்களைச் சாதிக்க முடியும். உங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள திறமைகளை மற்றவர்களுக்குப் பயன்படும் வகையில் பயன்படுத்த வேண்டும்.
2. அவ்வப்போது பல வலிதரும் அனுபவங்களைப் பெறுவீர்கள். ஆயினும் அவை உங்களை வலிமை உள்ளவர்களாக்கும்.
3. தவறும்போதெல்லாம் தவறைத் திருத்திக் கொள்ள முயலுகையில் நீங்கள் வளர அது வாய்ப்பினைத் தரும்.
4. உங்களிடம் இருப்பதைத்தான் பிறருக்கு கொடுக்க முடியும். எனவே உங்கள் அறிவினை வளப்படுத்திக் கொண்டே இருங்கள்.
5. உங்கள் பணிச்சூழல் எத்தகையதாக இருந்தாலும் உங்களைக் கடந்து செல்லும் ஒவ்வொரு மாணவனின் வாழ்விலும் நல்ல மாற்றங்களை ஏற்படுத்துங்கள். நாம் படைக்கப்பட்டதற்கான நோக்கத்தைப் புரிந்து கொண்டு செயல்பட்டால் நம் வாழ்வு அர்த்தமுள்ளதாக முழுமையடையும்.

“ என் பலம் என்ன, பலவீனம் என்ன? என்ற கட்டுரையில் தரப்பட்டுள்ள 100 கேள்விகளைக் கொண்ட வினாத்தாளைப் பயன்படுத்தி  நாம் எல்லோருமே தன்னைத்தானே அறிய அருமையான வாய்ப்பு.

 “ நால்வகை ஆசிரியர்கள்” என்னும் கட்டுரையில் ஆசிரியர்களை,
1.ஜனநாயக பாணி உடையவர்கள்.
2.சர்வாதிகாரிகள்.
3.அதிகாரத்துவபாணி உடையவர்கள்.
4.எதைப்பற்றியும் கவலைப்படாதவர்கள்
என நான்காகப்பிரித்துள்ள நூலாசிரியர், இந்நால்வரில் நாம் எந்த வகை என்பதை அறிய “ மாற்றம் என்பது மட்டுமே மாறாதது”  என்ற கட்டுரையில் தரப்பட்டுள்ள 50 கேள்விகளுக்கு பதிலளிப்பதின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
கற்றலில் குறைபாடு இருந்தும் தனது தனித்திறன்களால் மிகப்பெரும் வெற்றியடைந்த விஜய் டிவியின் சமையல் நிகழ்ச்சிகளில் வரும் வெங்கடேஷ் பட், நந்தகுமார் ஐ.ஏ.எஸ், அருண் பெர்ணான்டஸ் போன்றோரைப் பற்றிய கட்டுரைகள் கற்றலில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு மட்டுமல்ல அவர்களை நினைத்து நாளும் வருந்தும் அவர்களின் பெற்றோருக்கும் தன்னம்பிக்கை அளிக்கும்.

இவ்வாறு இந்த நூலானது எட்டு வகையான நுண்ணறிவுத் திறனை எவ்வாறு முறையான  பயிற்சிகளாலும், விடா முயற்சிகளாலும் அனைவரும் பெற்று கற்றலில் அனைவரும் முன்னேற  இந்நூல் வழிகாட்டுகிறது.
36 தலைப்புகளின் தொடக்கத்திலும் தரப்பட்டுள்ள அறிஞர்களின் ஆகச்சிறந்த கருத்துகள் அருமை.

பெற்றோரும் ஆசிரியர்களும் கண்டிப்பாக ஏன் இந்நூலை வாசிக்க வேண்டும்? என்பதற்கான பதிலாக நூலாசிரியரே, “ ஒவ்வொரு பெற்றோரும், ஆசிரியரும் தன்னிடம் என்ன அறிவுத்திறன் உள்ளது என்பதை அறிந்தால்தான் தன் பிள்ளையிடம், தன் மாணவரிடம் என்ன திறன் உள்ளது என்பதை உணர முடியும். குறிப்பாக ஆசிரியர்களுக்கு இந்த பல்முனை நுண்ணறிவுக் கோட்பாடு பற்றிய தெளிவு இருந்தால்தான் தன் வகுப்பிலுள்ள அத்தனை மாணவர்களையும் கவரும் வண்ணம் பாடம் எடுக்க முடியும்” என்கிறார்.
இதையே கார்டனரும், “தான் கற்பிக்கும் முறையில் ஒரு குழந்தையால் கற்றுக் கொள்ள முடியாதபோது எந்த விதத்தில் கற்பித்தால் அக்குழந்தையால் கற்றுக் கொள்ள முடியுமோ அம்முறையைப் பின்பற்றிக் கற்றுக் கொடுப்பவரே மிகச்சிறந்த ஆசிரியர்” என்கிறார்.
எனவே மிகச்சிறந்த ஆசிரியராக, மிகச் சிறந்த பெற்றோராக நினைக்கும் ஒவ்வோரது கைகளிலும் இந்நூல் தவழட்டும். கல்வியியல் வகுப்புகளிலும் இந்நூல் பாடமாகட்டும்.
இந்த அருமையான நூலை தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு அளித்த நூலாசிரியை திருமதி.பிரியசகி அவர்களுக்கு நன்றிகள் பல!

புத்தகம்: கண்டேன் புதையலை
ஆசிரியை: திருமதி. பிரியசகி
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
விலை:160/- பக்கங்கள்:207

இவண்: இராமமூர்த்தி நாகராஜன்.

நூல் வேண்டுவோர் 044-24332424 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
ஆன்லைனில் பெற https://thamizhbooks.com/kanden-pudhaiyalai.html
- பிரியசகி

Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்