வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க என்னவழி? ஆலோசனை சொல்கிறது அரசு
கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க, பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து, சுகாதாரத்துறை அறிவுரை வழங்கி உள்ளது.
இதுதொடர்பாக, சுகாதாரத் துறை அமைச்சர், விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
* வெயில் காலத்தில், அதிக வியர்வை வெளியேறுவதால், உடலில் உப்புச்சத்து மற்றும் நீர்சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது. அதனால், அதிக தாகம், தலைவலி, உடல் சோர்வு,தலைசுற்றல், தசைப்பிடிப்பு, குறைந்த அளவு சிறுநீர் வெளியேற்றம், மயக்கம் மற்றும் வலிப்பு போன்றவை ஏற்படலாம்
* பச்சிளம் குழந்தைகள், சிறுவயது குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் முதியவர்கள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இவர்கள் காலை, 10:00 மணிமுதல், 3:00 மணி வரை, வெயிலில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்
* தாகம் இல்லை என்றாலும், சிறுநீர் வெளிர் மஞ்சள் நிறத்தில் வெளியேற, தினமும், 2.5 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்
* அதிகளவில் மோர், உப்பு மற்றும் மோர் கலந்த அரிசி கஞ்சி, இளநீர், பனைநுங்கு, உப்பு கலந்த எலுமிச்சை பழச்சாறு மற்றும் உப்பு சர்க்கரை கரைசல் ஆகியவற்றை பருக வேண்டும். நீர்ச்சத்து அதிக உள்ள வெள்ளரிக்காய்,தர்பூசணி போன்ற பழச்சாறும் சாப்பிடலாம்
* வெளியே செல்லும் போது, குடிநீர் மற்றும் குடை எடுத்து செல்ல வேண்டும். வியர்வை எளிதாக வெளியேற, மிருதுவான தளர்ந்த, காற்றோட்டமான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். திறந்த வெளியில் வேலை செய்யும் போது, தலையில் பருத்தி துணி, துண்டு அணிந்து வேலை செய்ய வேண்டும்
* ஜீன்ஸ், லெக்கிங்ஸ் போன்ற இறுக்கமான ஆடைகள் அணிவதால், படர்தாமரை போன்ற சரும நோய்கள் ஏற்படும். அப்போது, ஸ்டீராய்டு கலந்த களிம்புகளை தடவக்கூடாது; சுய வைத்தியமும் செய்யக்கூடாது. தோல்டாக்டர்கரை அணுகி, தகுந்த சிகிச்சை பெற வேண்டும்
* சூரிய ஒளி நேரடியாக படும், ஜன்னல் மற்றும் கதவு போன்றவற்றை திரைச்சீலைகளால் மூடி வைக்கவும். இரவு நேரங்களில் குளிர்ந்த காற்று வரும் வகையில், ஜன்னல்களை திறந்து வைக்கலாம். காலை, மாலை இருவேளையும்குளிர்ந்த நீரால் குளிப்பது நல்லது
* வெயிலால் களைப்பு, தலைவலி, தலைசுற்றல் போன்ற அறிகுறிகள் ஒருவருக்கு ஏற்பட்டால், வெப்பம் அதிகமுள்ள இடத்திலிருந்து, வெப்பம் குறைவான இடத்திற்கு செல்ல வேண்டும். தண்ணீர், எலுமிச்சை பழச்சாறு, உப்பு சர்க்கரை கரைசல் பருக வேண்டும்
* மயக்கம், உடல் சோர்வு, அதிக அளவு தாகம், தலைவலி, கால் மணிக்கட்டு அல்லது அடிவயிற்றில் வலி ஏற்பட்டால், அருகில் உள்ள நபரை உதவிக்கு அழைக்கவும்
* மிகவும் சோர்வாகவோ, மயக்கமாகவோ இருந்தால், உடனடியாகடாக்டரை அணுக வேண்டும். கூடுதல் உதவிக்கு, 104; 044 -2435 0496; 2433 4811; 94443 40496; 93614 82899 என்ற, எண்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
Comments
Post a Comment