கூட்டுறவுச் சங்க தேர்தல்: ஆணையம் பதிலளிக்க உத்தரவு

கூட்டுறவுச் சங்கங்களுக்கான தேர்தல் குறித்து கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக, நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த மாசிலாமணி, வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அசோக்குமார்ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 'தமிழகம் முழுவதும் கூட்டுறவுச் சங்கங்களுக்கான நிர்வாக உறுப்பினர்களுக்கான தேர்தல் 4 கட்டங்களாக நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுக்கள் கடந்த 26 -ஆம்தேதி முதல் பெறப்பட்டு வருகின்றன. முதல் கட்டத் தேர்தல் திங்கள்கிழமை (ஏப்.2) நடைபெற்றது. இந்தத் தேர்தலில் போட்டியிட விரும்பும் திமுகவினரின் வேட்புமனுக்களை அதிகாரிகள் வாங்க மறுக்கின்றனர். அப்படியே மனுக்களை வாங்கினாலும் ஒப்புகைச் சீட்டு வழங்கப்படுவதில்லை. ஆளுங்கட்சிக்கு சாதகமாக இந்தத் தேர்தல் நடைபெறுகிறது. கூட்டுறவுச் சங்க விதிகளுக்குமுரணாக நடைபெற உள்ள இந்த தேர்தலுக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்' என கோரியிருந்தனர். இந்த மனு நீதிபதி டி.ராஜா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரான அசோக்குமார் சார்பில் மூத்த வழக்குரைஞர் பி.வில்சன் ஆஜராகி, 'திமுகவினரின் வேட்புமனுக்கள் எதன் அடிப்படையில் நிராகரிக்கப்பட்டது என்பதற்கு தேர்தல் அதிகாரிகள் கூறும் காரணங்கள் ஏற்கதக்கதல்ல. தமிழகம் முழுவதும் உள்ள 4,698 கூட்டுறவுச் சங்கங்களில் 92 சதவீத சங்கங்களுக்கு தேர்தல் நடத்தாமல் போட்டியின்றி நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்ட 332 சங்கங்களில் 97 சங்கங்களுக்கான தேர்தல் நிறுத்தப்பட்டுள்ளது. அந்த அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளன. ஆளும் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் மட்டுமே தேர்வு செய்யப்படுகிறார்கள். இது கூட்டுறவுச் சங்க விதிகளுக்கு முரணாக உள்ளது. வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது சட்ட விரோதமானது' என வாதிட்டார். அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு தலைமை வழக்குரைஞர் அரவிந்த் பாண்டியன், 'தேர்தலில் முறைகேடு இருந்தால் சங்கத்தின் பதிவாளரிடம்தான் முறையிட வேண்டும். நேரடியாக வழக்கு தொடர முடியாது. எனவே, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல' என வாதிட்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல் ஆணையத்தின் வழக்குரைஞர் எஸ்.பழனிச்சாமியிடம், இந்தத் தேர்தல் குறித்து கூட்டுறவுச் சங்கங்களுக்கான தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்

Google Maps! Latest Update for Bikers!