தனி ஒருவன் : மூடு விழா காணும் நிலையில் இருந்த அரசுப் பள்ளியை தரம் உயர்த்திய ஆசிரியர்!

சில வருடங்களுக்கு முன்பு, வெறும் 3 மாணவர்கள் பயின்றுவந்ததால் மூடு விழா காணவிருந்த தேனாடு அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தற்போது 50 மாணவர்களுடன் சிறப்பான ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. 




நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்த தேனாடு என்ற இடத்தில், அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி அமைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மூன்றே மூன்று மாணவர்கள் மட்டுமே இங்குப் பயின்றுவந்ததால், இப்பள்ளி மூடப்படும் என்ற நிலை ஏற்பட்டது. இந்நிலையில் ஆசிரியர் தர்மராஜ் என்பவரது முயற்சியால் தற்போது பள்ளியில், சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் தனியார் பள்ளிக்கு இணையான கல்வியை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், பள்ளியின் ஆண்டு விழா வழக்கமானதாக இல்லாமல் இருக்க முடிவு செய்த பள்ளி ஆசிரியர்கள். ஆண்டு விழாவை இலக்கிய இரவாகக் கொண்டாடினர். விழாவுக்குச் சிறப்பு அழைப்பாளராக நீலகிரி மாவட்ட எஸ்.பி., முரளி ரம்பா சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்தார். 

வழக்கமாகப் பள்ளி நிகழ்ச்சிகளுக்கு காக்கிச் சீருடையில் பங்கேற்கும் எஸ்.பி., அரசுப்பள்ளியின் நிகழ்ச்சிக்கு சாதாரண உடையணிந்து வந்து முன்வரிசையில் அமர்ந்து சிறுவர்களின் நிகழ்ச்சிகளை நெகிழ்ச்சியுடன் பார்த்து ரசித்தார். பின்னர் மாணவர்கள் மற்றும் பெற்றோர் முன்னிலையில் அவர் பேசுகையில், “ தனது 5ம் வகுப்பு வரை 2கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றும், 12ம் வகுப்பு வரை 7 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று பள்ளிக்கல்வியை பயின்றதாகத் தெரிவித்தார். 


மேலும், 12ம் வகுப்பு நிறைவடைந்ததும், குடும்ப தொழிலான விவசாயத்தில் ஈடுபட்ட போது, விவசாயத்தைவிடப் படிப்பது எளிதாக இருப்பதாகத் தோன்றியது. அதற்குப் பிறகு முயற்சி செய்து, ஐ.பி.எஸ்., அதிகாரியாகியுள்ளேன். ஆசிரியர் தர்மராஜின் செயல்பாடு, என்னை மிகவும் கவர்ந்துள்ளது. அவரை நீலகிரி மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மற்றும் பின்தங்கிய பள்ளிகளுக்கு அழைத்துச் சென்று அவர்களின் கல்வியை உயர்த்த வேண்டும் என்ற எண்ணமும் எனக்குத் தோன்றியுள்ளது. 

தற்போது உள்ள சூழ்நிலையில் அரசுப் பள்ளிகள் வேண்டுமா வேண்டாமா என்ற கேள்வி நிலவி வருகிறது. ஆனால் தர்மராஜ் போன்ற ஆசிரியர்கள் இருக்கும் போது அரசுப் பள்ளிகள் கண்டிப்பாக இயங்க வேண்டும். நான் பல்வேறு சர்வதேச  பள்ளிகளின் ஆண்டு விழாவிற்குக் கூட சென்றுள்ளேன். அவர்களை விடப் பல மடங்கு சிறப்பாக இங்கு மாணவர்களின் நிகழ்ச்சிகள் அமைந்திருந்தன. எனவே, அரசுப் பள்ளியில் பிள்ளைகள் படிப்பதை பெற்றோர்கள் இழிவாகக் கருத வேண்டாம்,”என்றார். 



குறிப்பாக எஸ்.பி., முரளி ரம்பா ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் என்பதால், அவருக்கு அவ்வளவாக தமிழ் பேச வராது, ஆனாலும் கூட நிகழ்ச்சியில் பேசிய அவர் ததும்பும் தமிழில் பேசி, இந்திய அரசியல் தலைவர்களை விமர்சித்து மாணவ, மாணவியர் நடித்த ‘பஞ்சுமிட்டாய் பேங்க்’ நாடகத்தை மிகவும் ரசித்ததாக கூறியது அங்கு கூடியிருந்த அனைவரையும் மகிழ்ச்சியடைய செய்தது. 

Comments