ஒரு நபர் குழு பரிந்துரை செய்தால்தான் ஊதிய முரண்பாடுகளை களைய முடியும்: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

ஒரு நபர் குழு பரிந்துரை செய்தால்தான் ஊதிய முரண்பாடுகளை களைய முடியும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  செங்கோட்டையன் அறிவித்துள்ளார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:


7வது ஊதியக்குழு பரிந்துரைகளின் படி இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய ₹20,600 முதல் 65,500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் தனி  ஊதியம் ரூ.750 முதல் ரூ.2 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அதோடு மட்டுமன்றி, இந்த ஊதியகுழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தியதன் மூலம்  ஏற்பட்ட ஊதிய முரண்பாடுகளைக் களைவதற்கு ஒரு நபர் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவின் பரிந்துரைகளால் மட்டுமே ஊதிய முரண்பாடுகளை களைய முடியும். மேலும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய திருத்தம் கோரி  தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம்  பிறருடைய தூண்டுதலின் பேரில் கடந்த 23ம் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். 

நானும், பள்ளிக்கல்வித்துறை முதன்மை  செயலாளரும் அவர்களை அழைத்து பேசிய பின்பும் அவர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். ஆசிரியர்களின் இந்தப் பிரச்னைக்கு ஒரு நபர் பரிந்துரை மூலமாக தீர்வு காண வேண்டப்படுகிறது. எனது இந்த கோரிக்கையை ஏற்று ஆசிரியர்கள்  உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  

Comments