தொடக்கப்பள்ளி ஆசிரியர்களைப் பதறவைத்த தமிழக அரசின் சுற்றறிக்கை!

தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு, தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வரும்போது, சொந்தக் காரணங்களுக்காக 3 ஆண்டுகளுக்கு அந்தப்  பதவி உயர்வை தற்காலிகமாக நிறுத்தக் கோரலாம் என்ற சலுகை இருக்கிறது. 

அந்த 3 ஆண்டுகள் கழித்து பதவி உயர்வு தராமல், 4-ம் ஆண்டில் பதவி உயர்வு தரும் நிலை தற்போது உள்ளது என்று பதவி உயர்வுக்காகத் தகுதி பெற்ற ஆசிரியர்கள் புலம்புகிறார்கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநிலத் துணைச் செயலாளர் நா.சண்முகநாதன், "தமிழகத்தில் தொடக்கப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாகப் பணிபுரிவோருக்கு, அந்தந்த ஒன்றியத்தில் உள்ள காலி பணியிடங்களின் அடிப்படையில் முன்னுரிமை கொடுத்து தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கப்படும். 

இது வழக்கமாக நடந்துவரும் நடைமுறை. பொதுவாக, ஒவ்வொரு ஒன்றியத்திலும் ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பணியிடம் வரும். சில ஆண்டுகள் வராது. இதற்காக இடைநிலை ஆசிரியர்கள் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்க வேண்டும். 

பதவி உயர்வுக்கான அறிவிப்புகள் வரும்போது, தங்களது உடல்நிலை, குடும்ப சூழ்நிலை காரணமாகச் சம்பந்தப்பட்ட, தகுதியுள்ள ஆசிரியர்கள், தங்களுக்கான பதவி உயர்வை தற்காலிகமாக வேண்டாம் என்று கூறலாம். இதனால் மூன்று ஆண்டுகளுக்கு அவர்களுக்கு பதவி உயர்வு நிறுத்தி வைக்கப்படும். 

அதேசமயம், ஒவ்வோர் ஆண்டு தயாரிக்கப்படும் முன்னுரிமைப் பட்டியலில் இவர்கள் பெயர் முதலாவதாக இருக்கும். அவர்களது பெயருக்கு அருகிலேயே மூன்று ஆண்டுகள் பதவி உயர்வு துறப்பு என எழுதி வைத்திருப்பார்கள். பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தும்போது, பதவி உயர்வு வேண்டாம் என்பவர்கள். கலந்தாய்வு நடைபெறும் இடத்திற்குச் சென்று 3 ஆண்டுகள் பதவி உயர்வு துறப்பு செய்வதாக எழுதித் தர வேண்டும்.


2015-16 ம் கல்வியாண்டுக்கான தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு கடந்த 2015 மே மாதம் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், மாநிலம் முழுவதும் காலதாமதமாக 17.8.2015-ம் தேதி நடைபெற்றது. அப்போது சிலர் தங்களது சூழ்நிலை காரணமாகப் பதவி உயர்வை  வழக்கத்தின்படி தற்காலிகமாக 3 ஆண்டுகளுக்கு வேண்டாம் என எழுதிக் கொடுத்துள்ளார்கள். 

எழுதிக் கொடுத்த 2015-16, 2016-17, 2017-18 ஆகிய மூன்று கல்வியாண்டு இந்த ஏப்ரல் மாதத்துடன் முடிவடைகிறது. இந்நிலையில், 17.8.2015 தேதியன்று 3 ஆண்டுகளுக்கு பதவி உயர்வு துறப்பு செய்தவர்களுக்கு வரும் மே மாதம் நடைபெறும் 2018-19 கல்வியாண்டுக்கான கலந்தாய்வில் பதவி உயர்வு தர வேண்டும். ஆனால், இவர்கள் 2019-20-ம் கல்வியாண்டு பதவி உயர்வுக்குதான் அழைக்கப்படுவார்கள் என்று சுற்றறிக்கை தற்போது வந்துள்ளது. 

அரசாங்கத்தின் உத்தரவு 3 ஆண்டுகள் பதவி உயர்வு துறப்பு என்று இருந்தாலும், 4 கல்வியாண்டுகள் கழித்தே பதவி உயர்வு வழங்கப்படுவது ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் பதவி உயர்வு பட்டியல் ஜனவரி 1-ம் தேதி தயாரிக்கப்படும். எனவேதான் ஆசிரியர்கள் 3 ஆண்டு பதவி உயர்வு துறப்பு என்று எழுதிக் கொடுத்தாலும் 4 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியுள்ளது. 

17.8.15 அன்று நடைபெற்ற கலந்தாய்வில் 3 ஆண்டுகள் பதவி உயர்வு வேண்டாம் என்று எழுதிக் கொடுத்தவர்கள் 17.8.2018-க்குப் பின் வரும் தலைமை ஆசிரியர் பணியிடத்தில் நியமிக்க தொடக்கக் கல்வி இயக்குநர் நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் மே மாதம் நடைபெறும் கலந்தாய்விலிருந்து இதை நடைமுறைப்படுத்தி மாநிலம் முழுவதும் உள்ள தொடக்கப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கையைத் தொடக்கக் கல்வி இயக்குநர் நிறைவேற்ற வேண்டும் என்று ஆசிரியர்கள் எதிர்பார்க்கிறார்கள்" என்றார்.

Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்