30 மாணவர்களுக்கு குறைவாக உள்ள 2.50 லட்சம் பள்ளிகள் இணைப்பு: அரசு ஆலோசனை

நாடு முழுவதும் 30 மாணவர்களுக்கு குறைவாக உள்ள இரண்டரை லட்சம் பள்ளிகளை ஒன்றுடன் ஒன்று இணைக்க மாநில அரசுகளின் ஆலோசனையை மத்திய அரசு கேட்டுள்ளது. 

மத்திய அரசு மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்த அனைவருக்கும் கல்வி திட்டம், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது. இவை தவிர இடைநின்ற மாணவர்களை கண்டறிய ஒவ்வொரு ஆண்டும் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பும் நடத்தப்படுகிறது.

இருப்பினும் அரசு பள்ளிகளில் மாணவ மாணவியர் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. பல்வேறு பள்ளிகள் இதன் காரணமாக மூடப்பட்டுள்ளன. மாணவர் எண்ணிக்கை குறைந்த பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லை, தரமான கல்வி கிடைப்பது இல்லை என்ற புகார்களும் எழுந்துள்ளன. 

மத்திய, மாநில அரசுகள் கல்விக்காக பெருமளவு தொகை செலவிடும் போது அவை அரசு பள்ளி மாணவ மாணவியரை முழுமையாக சென்றடையவில்லை என்பது ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது. மேலும் தேசிய அளவில் மாணவர்களிடையே அடைவு திறன் தேர்வுகள் நடத்தப்படும் வேளையில் மாணவர்களின் கல்வி தரம் மெச்சப்படும் நிலையில் இல்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தொடக்க நிலையில் கல்வி தரத்தை மேம்படுத்த அரசு பள்ளிகளில் கூடுதல் கவனம் செலுத்த மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை முடிவு செய்து மாணவர்கள் எண்ணிக்கை குறைந்த பள்ளிகளை ஒன்றுடன் ஒன்று இணைக்கும் முடிவுக்கு வந்துள்ளது. 

ஒரு வருவாய் கிராமத்தில் உள்ள எல்லா அரசு பள்ளிகளையும் ஒன்றோடு ஒன்று இணைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தயார் செய்த மசோதாவிற்கு மாநில அரசுகளின் கருத்துகளை கேட்டு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 

புதியதாக குழந்தைகளை சேர்க்க முடியாத நிலை உள்ள பள்ளிகள், 30 குழந்தைகளுக்கு கீழ் மாணவர்கள் எண்ணிக்கையை கொண்ட பள்ளிகள், ஆசிரியர்கள் எண்ணிக்கையில் குறைபாடுகள் உள்ள பள்ளிகள் இந்த இணைப்பு பட்டியலில் இடம் பிடிக்கிறது. மொத்தம் 2 லட்சத்து 50 ஆயிரம் பள்ளிகள் இந்த வகையில் இணைக்கப்படும் என்று கூறப்படுகிறது.


தொடக்க, நடுநிலை பள்ளிகள் இந்த இணைப்பு பட்டியலில் அதிகம் இடம் பெற்றுள்ளது. இணைப்பு அடிப்படையில் மாற்றம் பெறுகின்ற பள்ளிகள் பின்னர் மாதிரி பள்ளிகளாக செயல்படும். 

பள்ளிக்கு தேவையான இட வசதிகளை ஏற்படுத்துதல், மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரித்தல், அதற்கு ேதவையான அளவு ஆசிரியர்கள் எண்ணிக்கையை உயர்த்துதல், கல்வியின் தரத்தை மேம்படுத்துதல், மாணவர்கள் இடைநிற்றலை தடுத்தல் போன்றவை இந்த திட்டத்தின் முக்கிய நோக்கங்கள் ஆகும். மாநில அரசுகளின் கருத்துகள் கேட்கப்பட்ட பின்னர் மசோதாவிற்கு இறுதிவடிவம் கொடுக்கப்படும்.

Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்

Google Maps! Latest Update for Bikers!