250 மேடைகள்... 295 இளம் விஞ்ஞானிகள்.. இதன் தொடர்ச்சியாக ஒரு அசத்தல் கண்டுபிடிப்பு... கெத்து காட்டும் கரூர் அரசுப் பள்ளி!

சாதிக்கும் எண்ணமும் விடாமுயற்சியும் இருந்தால், எங்கிருந்தாலும் வெற்றியாளனாக வலம்வர முடியும் என நிரூபித்துக் காட்டியிருக்கிறார், ம.ஹரிஹரன். 



கரூர் மாவட்டம், வெள்ளியணை கிராமத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் டூ படிக்கிறார் ஹரிஹரன். இவரின் அறிவியல் ஆர்வம், ஜப்பானுக்குச் செல்லும் வாய்ப்பை வழங்கியுள்ளது. அதுகுறித்து பள்ளியின் ஆசிரியர் பெ.தனபால், ``நான் இந்தப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக, இளம் விஞ்ஞானிகள் குழு வழிகாட்டிப் பணியாற்றி வருகிறேன்.

12 ஆண்டுகளாக மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வத்தையும் சிந்தனையையும் வளர்த்தெடுக்க, பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறேன். மாணவர்களும் ஆர்வம் மற்றும் உற்சாகத்துடன் பங்களித்து வருகிறார்கள். நான் கல்லூரியில் படிக்கும்போது ஓர் அறிவியல் ஆராய்ச்சி மையத்துக்குச் சென்றிருந்தேன். 

ஆனால், சரியான சூழல் இல்லாததால் அங்கே தேர்ந்தெடுக்கப்படவில்லை. என்னால்தான் இதுபோன்ற பெரிய அறிவியல் மையங்களுக்குச் செல்லமுடியவில்லை. என்னிடம் படிக்கும் மாணவர்களையாவது உயர்த்த தகுந்த பயிற்சி அளிக்க வேண்டும் என உறுதியேற்றேன்.

தனபால் பள்ளி மாணவர்களை வகுப்பு நடைபெறும் நேரம் தவிர்த்து, காலை மற்றும் மாலையில் அறிவியல் சோதனைகள் செய்ய பயிற்சி அளிக்கிறேன். விருப்பமான மாணவர்களை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேரமும் சோதனைகள் செய்ய பயிற்சியளிக்கிறேன். மாணவர்களுக்கு நான் தரும் முதல் பயிற்சி, செய்தித்தாள்களைப் படிக்கச் சொல்வதுதான். அப்போதுதான் நம் சமூகத்தில் என்ன பிரச்னை நடக்கிறது. 

என்ன தேவை எனப் புரிந்துகொள்வார்கள். அதற்கான தீர்வு குறித்து சிந்திப்பார்கள். புதிய கண்டுபிடிப்புகள் நிகழும். என் நோக்கத்தை மாணவர்களும் தெளிவாகப் புரிந்துகொள்கின்றனர். அதனால்தான், தொழிற்சாலை கழிவுநீரைப் பயன்படுத்தி நேப்பியர் கிராஸ் ( napier grass) வளர்ப்பது, சீமை கருவேல மரத்தை அகற்றுவது எனப் பொதுநலம் சார்ந்த சாதனங்களைக் கண்டுபிடித்துள்ளனர். 


எங்கள் பள்ளி மாணவர்கள் இதுவரை 250 மேடைகள் ஏறி, 295 இளம் விஞ்ஞானிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியே ம.ஹரிஹரனின் கண்டுபிடிப்பு'' எனப் பெருமிதத்துடன் தொடர்கிறார் தனபால். 

``ஹரிஹரன் அறிவியல் பாடத்தை மிகவும் விரும்பிப் படிக்கும் மாணவர். சூழலியல் காக்கும் கழிவறையை அதிகம் செலவின்றி உருவாக்கியுள்ளார். இந்தக் கழிவறை தரையிலிருந்து சற்றே உயரத்தில் இருக்கும். 

கழிவறையில் தென்னம் நார், சாம்பல் பயன்படுத்த வேண்டும். நீர் பிரிக்கப்பட்ட மலம், தனித்தொட்டியில் விழும். அதனுடன் இருக்கும் சாம்பலும் தென்னம் நாரும் அதை உரமாக்கிவிடும். ஹரிஹரனின் இந்தக் கண்டுபிடிப்பு, நிலம், நீர், காற்று ஆகிய மூன்றும் மாசுபடாமல் காக்கிறது. அதனாலேயே இந்தக் கண்டுபிடிப்பு தேசிய அளவிலான விருதுகளைப் பெற்றுள்ளது. 

சமூக ஆர்வலர்கள் பலரும் ஹரிஹரகனின் கண்டுபிடிப்பை வியந்து பாராட்டியுள்ளனர். தங்கள் வீடுகளிலும் இதை அமைக்கத் திட்டமிட்டுள்ளனர். பள்ளிக் கல்வித்துறையும், மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகமும் இணைந்து, அறிவியல் திறனுள்ள மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, ஜப்பான் நாட்டுக்கு அனுப்புகிறது. மாநில மற்றும் தேசிய அளவில் ஒரு மாணவர் பெறும் விருதுகளின் அடிப்படையில், தமிழ்நாட்டின் 32 மாவட்டங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 மாணவர்களில் ஹரிஹரனும் ஒருவர். 

அடுத்த மாதம் ஜப்பானுக்குச் செல்கிறார். என்னிடம் படித்த முருகானந்தம் எனும் மாணவர், ஏற்கெனவே ஜப்பானுக்குச் சென்றிருக்கிறார்'' என்கிறார் புன்னகையுடன்.




இந்தச் சாதனையைப் படைத்த ஹரிஹரன், ``ஆறாம் வகுப்பிலிருந்து இந்தப் பள்ளியில்தான் படிக்கிறேன். எங்கள் அறிவியல் ஆசிரியர் தனபால், என்னை ஊக்கப்படுத்தி அறிவியல் சோதனைகளைச் செய்யப் பழக்கினார். எட்டாம் வகுப்பு படிக்கும்போது, மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டாலும் ஒன்றிலும் வெற்றி பெறவில்லை. 

ஆனாலும் மனம் தளரவில்லை. அடுத்த ஆண்டே மாநில அளவில் தேர்வானேன். பத்தாம் வகுப்பு படிக்கும்போது, தமிழ்நாடு முழுவதும்  845 புராஜெக்ட்டுகள் போட்டியிட்டதில், எனக்கு முதல் பரிசு கிடைத்தது. அந்த ஆர்வத்தைத் தொடர்ந்ததால், ஜப்பானுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது. என்னுடைய சூழல் காக்கும் கழிவறையில் பயன்படுத்தப்படும் நீர் மற்றும் சிறுநீர் தனியாகப் பிரிக்கப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு விவசாயத்துக்குப் பயன்படுத்தப்படும். மலம், ஆறு மாதங்களில் நல்ல உரமாக மாறும். 

ஒரு கிலோ செயற்கை உரம் தயாரிக்க, 2000 லிட்டருக்கும் மேலான நீர் தேவைப்படும் என்கிறார்கள். ஆனால், நான் உருவாக்கியிருக்கும் முறையில் நீரே தேவைப்படாது. செயற்கை உரத்தைவிட பாஸ்பரஸ் உள்ளிட்ட சத்துகள், இதில் அதிகம் உள்ளதாக ராயனூர் வேளாண்  பரிசோதனை மையம் தெரிவித்துள்ளது. 

என்னுடைய இந்த முயற்சிக்கு அறிவியல் ஆசிரியர் தனபால் மற்றும் தலைமை ஆசிரியரும் பெரும் உதவி செய்துள்ளனர். என் அம்மா கண்ணம்மாள் கட்டட வேலைக்குச் செல்கிறார். நான் சரியாகப் படிக்க மாட்டேன் என அவரிடம் பலர் கூறியபோதும், என்னை நம்பி அறிவியல் சோதனைகள் செய்ய அனுமதித்தார். அந்த நம்பிக்கையை நிச்சயம் காப்பாற்றுவேன் என்பதற்கான சின்ன அடையாளமே இது" என்று பொறுப்புடன் கூறுகிறார்.

எளிய மனிதர்கள் வீட்டிலிருந்து, அரசுப் பள்ளிகளில் படித்துச் சாதிக்கும் மாணவர்கள் மற்றவர்களுக்குப் பெரும் ஊக்கச்சக்தி.

Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்

Google Maps! Latest Update for Bikers!