தமிழகம் உள்பட 19 மாநிலங்களில் அடுத்த ஆண்டு தேர்தல்: சட்ட ஆணையம் பரிந்துரை

எதிர் வரும் 2019 மக்களவைத் தேர்தலுடன் 19 மாநிலங்களுக்கான சட்டப் பேரவைத் தேர்தலையும் இணைந்து நடத்தலாம் என்று மத்திய சட்ட ஆணையம், தனது திட்ட வரைவு அறிக்கையில் பரிந்துரைத்துள்ளது.
அதன்படி, தமிழகம், கேரளம் உள்பட முக்கியமான பல மாநிலங்களுக்கு அடுத்த ஆண்டு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம் என்ற உத்தேச திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 12 மாநிலங்களுக்கு 2024-இல் பேரவைத் தேர்தலை நடத்தலாம் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அடுத்த செவ்வாய்க்கிழமை (ஏப். 17) நடைபெறும் சட்ட ஆணையக் கூட்டத்தில் இந்த விவகாரம் தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்களவைக்கும், மாநில பேரவைகளுக்கும் ஒருங்கிணைந்து தேர்தலை நடத்த வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. பிரதமர் மோடி இக்கருத்தை பல்வேறு தருணங்களில் வெளிப்படுத்தியுள்ளார். இதன் மூலம் தேர்தல் செலவினங்கள் குறையும் என்றும், மத்திய அரசின் நலத் திட்டங்கள் அனைத்து மாநிலங்களுக்கும் சீராக சென்றடையும் என்றும் அவர் கூறினார். ஆனால், அதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில், மத்திய சட்ட ஆணையம் இந்த விவகாரத்தில் தனது பரிந்துரைகளை அரசிடம் அளிக்க உள்ளது. அதுகுறித்த அறிக்கையை 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தியாளர்கள் ஆராய்ந்தனர். அதில், வரும் 2019-இல் தமிழகம், தில்லி, ஆந்திரம், அருணசாலப் பிரதேசம், அஸ்ஸாம், பிகார், சத்தீஸ்கர், ஹரியாணா, கேரளம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான், சிக்கிம், தெலங்கானா, மேற்கு வங்கம், புதுச்சேரி, ஜம்மு - காஷ்மீர், ஜார்க்கண்ட், ஒடிஸா உள்ளிட்ட மாநிலங்களுக்கு பேரவைத் தேர்தலை நடத்தலாம் என்ற திட்டம் இடம்பெற்றுள்ளது.
2024 மக்களவைத் தேர்தலுடன் மிúஸாரம், நாகாலாந்து, மேகாலயம், மணிப்பூர், கர்நாடகம், கோவா, குஜராத், ஹிமாசலப் பிரதேசம், பஞ்சாப், திரிபுரா, உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு சட்டப் பேரவைத் தேர்தலை நடத்தலாம் என்றும் அந்த அறிக்கையில் சட்ட ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
சட்ட ஆணையத்தின் கூட்டம் வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. மத்திய அரசு பிரதிநிதிகள் உள்பட அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்க உள்ள அக்கூட்டத்தில் இத்திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. அதில் கருத்தொற்றுமை ஏற்படும்பட்சத்தில் ஒருங்கிணைந்த தேர்தல் திட்டம் அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்லப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்