பிளஸ் 1க்கு மொழி பாட தேர்வு குறைப்பு ஜூன் 1ல் அமலுக்கு வருகிறது

பிளஸ் 1 பொது தேர்வில், மொழி பாடத் தேர்வை குறைக்கும் திட்டம், வரும் கல்வி ஆண்டில் அமலுக்கு வருவது உறுதியாகியுள்ளது. அதேபோல், முக்கிய பாடங்களுக்கான தேர்வையும் குறைக்க, ஆலோசனை துவங்கியுள்ளது.


தமிழக பள்ளிக்கல்வித் துறையில், கல்வித் தரத்தை உயர்த்தவும், தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப, கல்வி அமைப்பில் மாற்றம் செய்யவும், பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் முயற்சி மேற்கொண்டுள்ளார்.இதன்படி, 13 ஆண்டு கால பழைய பாடத் திட்டம், நவீன தொழில்நுட்பத்துக்கு ஏற்ப மாற்றப்பட்டுள்ளது.அதேபோல், தேர்வுத் துறையிலும் பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. பொது தேர்வில், 'ரேங்கிங்' முறை ஒழிக்கப்பட்டுள்ளது.மொபைல் போனில் தேர்வு முடிவுகள், எஸ்.எம்.எஸ்., ஆக அனுப்பும் திட்டம், 2017ல் அமலானது.இந்நிலையில், மாணவர்களுக்கான தேர்வு சுமையை குறைக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது.தற்போது, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில், தமிழ் அல்லது விருப்ப மொழிப் பாடம் மற்றும் ஆங்கில பாடங்களில், தலா இரண்டு தாள்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது. இதை, ஒவ்வொரு மொழிப் பாடத்துக்கும், ஒரு தாளாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த முடிவால், பிளஸ் 1, பிளஸ் 2வுக்கு, தற்போது நடத்தப்படும் எட்டு தேர்வுகள், ஆறு தேர்வுகளாக குறையும். இதனால், மாணவர்களுக்கும், தேர்வுத் துறைக்கும் சுமை குறையும் என, கல்வியாளர்கள் தரப்பில், பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன்படி, வரும் கல்வி ஆண்டில், பிளஸ் 1க்கு மட்டும், மொழி பாட தேர்வின் எண்ணிக்கையை குறைக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது.இதற்கு தமிழக அரசின் ஒப்புதல் கிடைத்ததும், விரைவில் அரசாணையாக, மொழிப் பாடத் தாள் குறைப்புக்கான அறிவிப்பு, வெளியாக உள்ளது.அதேபோல், மொழி பாடங்கள் மட்டுமின்றி, முக்கிய பாடங்களின் தேர்வு எண்ணிக்கையை குறைக்கவும், ஆலோசிக்கப்பட்டு வருகிறது.'முக்கிய பாடங்களை குறைக்க, கல்வியாளர்கள் தரப்பில், முரண்பாடான கருத்துகள் உள்ளதால், விரிவான ஆலோசனை நடத்தி, முடிவு எடுக்கப்படும்' என, அதிகாரிகள் கூறினர்.

Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்