மூன்றாண்டுகளாக தொடரும் சேவை : மலைவாழ் குழந்தைகளுக்கு உணவு வழங்கும் HM.: ஆண்டிபட்டி அருகே ஒரு சபாஷ் டீச்சர்

ஆண்டிபட்டி அருகே அரசுப்பள்ளி தலைமையாசிரியை, கடந்த 3 ஆண்டுகளாக மலைவாழ் குழந்தைகளுக்கு உணவு, ஸ்நாக்ஸ் வகைகளை  வழங்கி வருகிறார். அவர்களுக்கு தலைவாரி விடுதல் உள்ளிட்ட பணிகளையும் செய்து வருகிறார்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே ராஜக்காள்பட்டி ஊராட்சியில் கதிர்வேல்புரம் மலைக்கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் பளியர் இன மக்கள் 100  பேர் வசித்து வருகின்றனர். இங்குள்ள மலைவாழ் மக்கள், தங்கள் வாழ்வாதாரத்திற்காக மலையில் கிடைக்கும் தேன், கிழங்கு போன்ற பொருட்களை  தேடி, குழந்தைகள் உட்பட குடும்பத்துடன் செல்கின்றனர். காலையில் துவங்கும் இவர்களது உணவுத்தேடல் மாலை வரை நீள்கிறது. இதனால் இவர்கள்  குழந்தைகளின் கல்வித்தரமும் பாதிக்கப்படுகிறது.

இந்த குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்க வேண்டும் என்ற நோக்கில் கதிர்வேல்புரம் அரசு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு  வந்தனர். பெற்றோருடன் கல்வியின் முக்கியத்துவம் குறித்து பேசி, மலைவாழ் குழந்தைகளை பள்ளியில் சேர்த்தனர். 

அப்போது, மலைவாழ் மக்களின்  உணவு மற்றும் அன்றாட வாழ்க்கையில் உள்ள சிரமங்களை உணர்ந்தார் பள்ளி தலைமையாசிரியை சாந்தி. எனவே, தினமும் காலை உணவை  வீட்டிலேயே சமைத்து கொண்டு வந்து இந்த குழந்தைகளுக்கு வழங்க தொடங்கினார்.  

மேலும் பிஸ்கட், சாக்லெட் உள்ளிட்ட ஸ்நாக்ஸ் வகைகள்,  பழங்களையும் குழந்தைகளுக்கு வாங்கி தருகிறார். இவரின் இச்சேவை கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. இதனால் குழந்தைகள்  பெற்றோருடன் மலைக்கு செல்லாமல், பள்ளிக்கு சென்று கல்வி பயில்கின்றனர்.

இதுகுறித்து பெற்றோர் கூறுகையில், ‘‘குழந்தைகளுக்கு காலையில் எழுந்து உணவு சமைத்து கொடுக்க தாமதம் ஆகி விடுகிறது. எனவே,  குழந்தைகளை பட்டினியுடனே பள்ளிக்கு அனுப்புவோம். அதிகாலை  மலைக்கு சென்றுவிட்டு மாலையில்தான் வீடு திரும்புவோம். இதனால்  குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டது. 


ஆனால் தலைமையாசிரியை சாந்தி மற்றும் அவருக்கு உதவியாக ஆசிரியர் கணேஷ்  ஆகியோர், எங்கள் குழந்தைகளுக்கு பல்தேய்த்து விட்டும், எண்ணெய் சீவி தலைவாரி விட்டு, பவுடர் பூசி அவர்களை சிறப்பாக கவனித்துக்  கொள்கின்றனர். தன் வீட்டிலேயே எங்கள் பிள்ளைகளுக்காக, சமைத்து கொண்டு வருவது எல்லாம் பெரிய விஷயம். குழந்தைகள் நன்றாக படித்து  வருவது மிக மகிழ்ச்சியாக உள்ளது,’’ என்கின்றனர். 

Comments