பள்ளிகளில் ஏ.சி. வகுப்பறைகள் அமைக்கப்படுவது தேவைதானா? ஓர் அலசல்

பள்ளி

மாணவர்களை ஈர்க்க, தங்கள் பள்ளியில் பல்வேறு வசதிகள் இருக்கிறது என தனியார் பள்ளிகள், பல காலமாக விளம்பரம் செய்கின்றன. சமீபமாக, அரசுப் பள்ளிகள் பலவும், தங்கள் பள்ளியில் ஏ.சி. வகுப்பறைகள் அமைக்கப்பட்டிப்பதாகச் சொல்லும் செய்தியைக் காணமுடிகிறது. ஒரு மாணவர், சிறப்பாகக் கல்வி கற்பதற்கு வகுப்பறைச் சூழலும் முக்கியம். அதனால் இவ்வாறு அமைக்கப்படுகிறது எனச் சொல்லப்பட்டாலும், இதற்கு மாற்றுக் கருத்துகளும் எழுகின்றன. இதுகுறித்து ஆசிரியர்கள் சிலரிடம் கேட்டோம். 
வசந்த்




 வசந்த், கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, கடலூர்: 
''நான் பணிபுரிந்த பள்ளியில், வகுப்பறைக்கு ஏ.சி அமைத்தேன். அது ஸ்மார்ட் கிளாஸ் ரூம். அதில் முப்பதுக்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்களும் இன்வெர்ட்டரும் இருக்கும். அதற்கான பாதுகாப்புக்காகவும் அது பயன்பட்டது. மற்றபடி, வகுப்பறைகளில் ஏ.சி தேவையில்லை என்பதே என் கருத்து. பெற்றோரைக் கவர்வதற்காக ஏ.சி வகுப்பறைகள் அமைக்கப்படுகின்றன என்று சொன்னாலும், பல கிராமங்களில் ஏ.சி இயங்குவதற்கான மின்சார வசதியே இல்லை. இன்வெர்ட்டர் வைத்து இயக்கும் சூழலும் இல்லை. பொதுவாக, அரசுப் பள்ளியின் வகுப்பறைகள் பெரியதாக இருக்கும். அதற்கு ஏ.சி செய்ய, பல்வேறு ஏற்பாடுகளுக்கும் சேர்த்து ஒரு லட்சத்துக்கும் மேல் செலவாகும். அந்தத் தொகையில் மாணவர்களுக்குத் தேவையான கழிப்பறை, குடிநீர் வசதிகளை ஏற்படுத்தித் தரலாமே.'' 
பிராங்களின்

பிராங்க்ளின், மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, கோயம்புத்தூர்: 
''ஏ.சி வகுப்பறைகள் என்பது, அந்தச் சூழலை மாணவர்கள் தெரிந்துகொள்ளவும் உணர்ந்துகொள்ளவும் உதவும். நான் முன்பு வேலை பார்த்த ராமர்பாளையத்தில் ஏ.சி. வகுப்பறைகள் இருந்தன. ஆனாலும், இந்த வசதி ஏற்படுத்துவதாலே பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகமாகும் என்பதில் உடன்பாடில்லை. ஆசிரியர்கள் திறமையாகப் பாடம் நடத்துவதும், அது பொதுமக்களிடம் பேசப்படுவதாலுமே மாணவர் சேர்க்கையை அதிகரிக்க முடியும்.'' 
சதீஷ்
சதீஷ்குமார், ஆசிரியர், புதுக்கோட்டை: 
''அரசுப் பள்ளிகளில் ஏ.சி. வகுப்பறைகள் அமைப்பது நான்கு பலன்களைத் தருகிறது. 
1.தனியார் பள்ளிகள்போல அரசுப் பள்ளியிலும் ஏ.சி வகுப்பறை இருக்கும் விஷயம் பெற்றோர்களை ஈர்க்கிறது. இதனால் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க ஆர்வம் காட்டுகின்றனர். 




2. மற்ற பள்ளிகளிடமிருந்து ஏ.சி வகுப்பறைகள் அமைத்த பள்ளியைத் தரம் உயர்த்திக் காட்ட உதவுகிறது. 
3. ஒரு மாவட்டத்தில் இரண்டு அல்லது மூன்று பள்ளிகளில் மட்டுமே ஏ.சி. வகுப்பறைகள் அமைக்கப்பட்டிருக்கும். அது, கல்வி அதிகாரிகள் கவனத்தை சட்டென்று ஈர்க்கவைக்கிறது. 
4. ஊடகத்தின் கவனத்தால் இதுபோன்ற பள்ளிகள் ஈர்க்கப்பட்டு, செய்திகள் வெளிவருகின்றன. அதுவும், மாணவர் சேர்க்கைக்கு மிகவும் உதவுகிறது.'' 
சசிகலா

சசிகலா, சன்னதி உயர்நிலைப் பள்ளி, வந்தவாசி: 
''பள்ளிக்கூடத்தில் மாணவர்களுக்குத் தேவையானது சுத்தமான குடிநீர், தூய்மையான கழிவறை, பாதுகாப்பான சுற்றுச்சுவர் போன்றவையே. அதுவே மாணவர் கல்வி கற்பதற்கான மகிழ்ச்சியான சூழலாக அமையும். சரியான உடைகள் உடுத்தாமல் வரும் மாணவர்கள் இருக்கும் நிலையில், ஏ.சி. வகுப்பறைகள் அவசியமற்றவை என்பதே என் கருத்து. ஏனெனில், எட்டு மணி நேரம் ஏ.சி.யில் இருக்கும் மாணவர் வீட்டிலும் அதை எதிர்பார்க்கும் மனநிலையும் வரும். அவர்களில் யாரேனும் ஒரு பெற்றோர், தன் வீட்டில் ஏ.சி வாங்கிப் பொருத்திவிட்டால், மற்ற பிள்ளைகள் ஏங்கிப் போவார்கள். இருக்கும் சூழலுக்கு ஏற்ப தன்னைத் தகவமைத்துக்கொள்வதைக் கற்றுக்கொடுப்பதும் கல்வியில் ஓர் அங்கம்தானே. ஏ.சி வகுப்பறைகள் தேவைதான். அது எப்போது என்றால், மாணவர்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றிய பிறகே. அதை முதலில் செய்வோம்.''

Comments

Popular Posts

Google Maps! Latest Update for Bikers!

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்