கல்வியியல் பல்கலையில் முறைகேடு

* கல்லூரிக்கு வராத மாணவர்களுக்கும் பி.எட் சான்றிதழ்


கல்வியியல் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் தன்னிச்சையாக செயல்படுவதால் தனியார் பி.எட் கல்லூரிகள் ஆய்வுப் பணியில் முறைகேடு நடந்துள்ளது. கல்வியியல் பல்கலைக் கழகத்தின் (பி.எட் பல்கலைக் கழகம்) கீழ் தமிழகத்தில் சுமார் 736 பி.எட் கல்லூரிகள் இணைப்பு பெற்றுள்ளன. அவற்றில் 14 கல்லூரிகள் நிதியுதவி பெறும் கல்லூரிகள். அரசுக் கல்லூரிகள் 7 செயல்படுகின்றன. மற்றவை தனியார் கல்லூரிகள். 

தனியார் கல்லூரிகள் அனைத்தும் கல்வியியல் பல்கலைக்கழகத்தில்தான் அங்கீகாரம் பெற்று செயல்பட வேண்டும். அப்போதுதான் அந்த கல்லூரிகள் இணைப்பு பெற்ற கல்லூரிகள் என்று அழைக்கப்படும். இந்த அங்கீகாரம் 3 ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட வேண்டும். புதுப்பிக்காத கல்லூரிகளின் அங்கீகாரம் செல்லாது.

கல்வியியல் பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் கவுன்சலிங் நடத்தி மேற்கண்ட கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்தி வருகிறது. அதேவேளையில், கல்லூரிகளில் அடிப்படை வசதிகள் உள்ளதா, மாணவர்களிடம் உரிய கட்டணம் வசூலிக்கப்படுகிறதா, யுஜிசி விதிப்படி கல்லூரிகள் செயல்படுகிறதா என்று பார்ப்பதும் பல்கலையின் வேலை. இதற்காக 3 ஆண்டுக்கு ஒருமுறை பல்கலை சார்பில் ஆய்வுப் பணி செய்ய வேண்டியது கடமை. தனியார் கல்லூரிகள் அங்கீகாரம் புதுப்பிக்கும் பணியில் உள்ள பல்கலை ஊழியர்கள்தான் ஆய்வுப் பணிக்கு செல்ல வேண்டும். 

ஆனால், கல்வியியல் பல்கலைக்கழகத்தில் தற்போதுள்ள துணை வேந்தர் தனக்கு வேண்டிய நபர்களை வைத்து இந்த ஆய்வுப் பணிகளை செய்ய சொல்கிறார். ஆனால் அவர்களோ ஆய்வுப் பணி என்ற பெயரில் கல்லூரிகளுக்கு செல்லாமல் சம்பந்தப்பட்ட கல்லூரிகளை சேர்ந்த நபர்களை சென்னையில் உள்ள ஒரு ஓட்டலுக்கு வரைவழைத்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். அதற்கு பிறகு செய்யப்படும் கவனிப்புக்கு ஏற்ப கல்லூரிகளின் அங்கீகாரம் புதுப்பிக்கப்படுகிறது. 

உண்மையில், மேற்கண்ட கல்லூரிகளில், யுஜிசி தெரிவித்துள்ள 100 மாணவர்களுக்கு இரண்டு யூனிட் என்ற விகித அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். அதன்படி இந்த கல்லூரிகளில் ஆசிரியர்கள் இல்லை. 

அத்துடன் 50க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் முதல்வர்கள் இல்லை. பி.எட் கல்லூரிகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கும் உரிய நேரத்தில் உரிய சம்பளம் வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டுகளும் இருக்கின்ற நிலையில், ஆய்வு செய்யாமலேயே அங்கீகாரம் புதுப்பிக்கப்படுகிறது. குறிப்பாக, யுஜிசி விதிகளின்படி பல கல்லூரிகளில் வசதிகள் இல்லை என்று மாணவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். 

மேலும், பல பி.எட் கல்லூரிகளில் சேர்க்கப்படும் மாணவர்கள் கல்லூரிக்கே வராமல் பி.எட் பட்டம் பெற்றதாக சான்றிதழ் பெறும் நிலையும் உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி வாரிய (என்சிடிஇ) விதிகளின்படி இவ்வளவு கல்லூரிகள் இருக்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கல்வியியல் பல்கலைக்கழகம் அதுகுறித்து கண்டுகொண்டதாக தெரியவில்லை. 


இதனால் பி.எட் படிக்கும் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். போதிய ஆசிரியர்கள் இல்லாத நிலையில் மேற்கண்ட கல்லூரிகளில் படித்த மாணவர்கள் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கின்றனர். கல்வியியல் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரின் ஆட்கள் வைத்ததுதான் சட்டம் என்ற நிலையில் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. அங்கு பணியாற்றும் ஊழியர்களையும் அடிமைபோல நடத்துகின்றனர். 

இதனால் கல்வியியல் பல்கலைக் கழகத்தில் நடக்கும் முறைகேடுகளை தமிழக ஆளுநர் விசாரிக்க வேண்டும் என்று மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர். 

Comments