மூலிகைப் பண்ணை, ஐந்து லட்சம் ரூபாயில் `கல்விச்சீர்'... அசத்தும் க.பரமத்தி அரசுப் பள்ளி
ஆனால், பல அரசுப் பள்ளிகளின் கல்வித்தரம், தனியார் பள்ளிகளைவிட பலமடங்கு உயர்ந்திருக்கிறது என்பதுதான் உண்மை. அப்படி ஓர் அரசுப் பள்ளிதான். கரூர் மாவட்டம் க.பரமத்தியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி.
இந்தப் பள்ளியின் ஆண்டுவிழா சமீபத்தில் நடந்தது. இருநூறுக்கும் மேற்பட்ட கிராம மக்களும், பெற்றோர்களும் பள்ளிக்குத் தேவையான சுமார் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்களைச் சுமந்தபடி `கல்விச்சீர்' வழங்க ஊர்வலமாக வந்தனர். அந்தக் கல்விச்சீரில் 90 ஆயிரம் மதிப்பிலான லிங்கோபோன் என்கிற ஆங்கிலம் எளிதாகக் கற்றுக்கொள்ள பயன்படும் மெட்டீரியல்ஸ், 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 25 தொகுதிகள்கொண்ட என்சைக்ளோபீடியா, பீரோக்கள், 48 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான புரஜெக்டர் உள்ளிட்ட, பள்ளிக்குத் தேவையான பொருள்கள் அடங்கியிருந்தன. அத்தனை பொருள்களையும் பெற்றோர்களும் ஊர் பொதுமக்களும் க.பரமத்தி அரசுத் தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்வக்கண்ணன் உள்ளிட்ட ஆசிரியர்களிடம் வழங்க, மாணவர்களின் கரகோஷம் விண்ணைப் பிளந்தது.
அதன் பிறகு, ஆண்டுவிழா தொடங்கியது. `நிரல்' என்ற திரைப்படத்தை இயக்கிய திரைப்பட இயக்குநர் ஹேம்நாத், இந்தப் பள்ளி மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களை வைத்து எடுக்கப்பட்ட `வெளிச்சம்' என்ற குறும்படம் ஒளிபரப்பப்பட்டது. அதில், அரசுப் பள்ளியில் பிள்ளைகளைச் சேர்த்தால் என்ன நன்மை என்பதையும், தனியார் பள்ளிகளில் சேர்த்தால் தாயின் தாலி முதற்கொண்டு அடகுக்கடைக்குப் போவதோடு, பிள்ளைகள் தனியார் பள்ளிகளில் எவ்வாறு கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் என்பதையும் பதிவுசெய்திருந்தார். விழாவில் கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் சூரியபிரகாஷ், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
"இந்தியாவில் உள்ள ஒவ்வோர் அரசுப் பள்ளியும் இப்படி மாறிவிட்டால், இந்தியா சீக்கிரம் வல்லரசாகிவிடும். இந்தப் பள்ளியில் படிக்க,
நான் மாணவனாக மாற முடியவில்லையே என்று ஏங்குகிறேன்" என்று தன் உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டார்.
இந்தச் சீர்மிகு மாற்றங்களுக்குக் காரணமான க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்வக்கண்ணனிடம் பேசினோம்.
``பத்து வருடங்களுக்கு முன்னர், நான் இந்தப் பள்ளிப் பணிக்கு வந்தபோது, மாணவர்களின் எண்ணிக்கை இருபதுக்கும் குறைவாகத்தான் இருந்தது. ஆனால், இப்போது மாணவர்களின் எண்ணிக்கை 193. இந்த மாற்றத்துக்குக் காரணம், சக ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், ஊர் இளைஞர்கள், பெற்றோர்-ஆசிரியர் கழகம் என்று எல்லாத் தரப்பின் கூட்டு முயற்சிதான். முதலில், நல்ல கல்வியைத் தர ஆரம்பித்தோம். ஆங்கிலத்தை, தனியார் பள்ளிகளைவிட மாணவர்களுக்குச் சிறப்பாக போதித்தோம். ஸ்மார்ட் க்ளாஸ்ரூம்கள், இசை, கராத்தே, யோகா உள்ளிட்ட இலவசப் பயிற்சி வகுப்புகள் என, எல்லா வகைகளிலும் மாணவர்களை மேம்படுத்தினோம். இதனால், தனியார் பள்ளிகளில் படித்துக்கொண்டிருக்கும் பிள்ளைகளையும் பெற்றோர்கள் இங்கே சேர்த்தார்கள்.
வெளியூரைச் சேர்ந்த பல பெற்றோர்கள், எங்கள் பள்ளியில் பிள்ளைகளைப் படிக்கவைப்பதற்காக இங்கே வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கியிருக்கும் அதிசயமும் நடந்திருக்கிறது. பிறகு, கிராம மக்களே கடந்த நான்கு வருடங்களாக பள்ளிக்குத் தேவையான பொருள்களை பல லட்சம் ரூபாய் செலவில் வாங்கிவந்து `கல்விச்சீர்' என வழங்கி வருகிறார்கள். இந்த வருடம் சுமார் ஐந்து லட்சம் ரூபாய் செலவில் கல்விச்சீர் கொடுத்திருக்கிறார்கள். பள்ளியில் இப்படி விலை உயர்ந்த பல பொருள்கள் இருப்பதால், அதைப் பாதுகாக்க ஒரு லட்சம் ரூபாய் செலவில் எட்டு சி.சி.டி.வி கேமராக்கள் வாங்கிப் பொருத்தியுள்ளோம். பள்ளி வளாகம் முழுக்க மரங்களை வளர்த்து, இயற்கையான காற்றோட்டத்தையும் சூழ்நிலையையும் உருவாக்கியுள்ளோம். வகுப்பறைதோறும் டைல்ஸ், ஃபேன், நாட்டுநடப்புகளைத் தெரிந்துகொள்ள டிவி என வசதி செய்துள்ளோம். மாணவர்களுக்குத் தரமான சீருடைகளை ஸ்பான்சரின் செலவில் வழங்கியுள்ளோம்.
சுத்தமான குடிநீர் வசதியை உருவாக்கியுள்ளோம். இதனால், எங்கள் பள்ளிக்கு ஐ.எஸ்.ஓ தரச்சான்றிதழும், ஒரு மாதத்துக்கு முன்னர் புனேவில் உள்ள ஓர் அமைப்பு தந்த `5s' விருதையும் பெற்றுள்ளோம். இந்திய அளவில் இந்த `5s' விருதை வாங்கிய ஒரே அரசுப் பள்ளி, எங்களுடையதுதான். அதேபோல், பள்ளி வளாகத்தில் கரிசலாங்கண்ணி, கருந்துளசி, ஆடாதொடை, சர்க்கரைக்கொல்லி உள்ளிட்ட 30 வகையான மூலிகைச்செடிகளை மாணவர்களைகொண்டே நடவுசெய்து வளர்த்துவருகிறோம். அந்த மூலிகைக் காற்று, மாணவர்களை நோயிலிருந்து காக்கிறது.
`அரசுப் பள்ளிகள்தான், சிறந்த கல்வியை போதிக்கும் போதிமரங்கள்' என கரூர் மாவட்ட மக்கள் அனைவரையும் சொல்லவைக்கும் வரை, எங்க முயற்சிகள் தொடரும்" என்றார் முத்தாய்ப்பாக!
Comments
Post a Comment