அமைச்சரிடம் ஆசிரியர்கள் புகார் பதவி உயர்வு கலந்தாய்வு நிறுத்தம்

 'காலிப் பணியிட விபரங்களை முறையாக தயாரிக்கவில்லை,' என பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையனுக்கு புகார் சென்றதால் இன்று (மார்ச் 19) நடக்க இருந்த ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்பட்டது.

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் பொதுமாறுதல் கலந்தாய்வு நடக்கிறது. கடந்த 2017 மேயில் தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடந்தது. அதன் பின் பல நடுநிலைப் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டதால், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை தொடக்கப் பள்ளிகளாகவும், ஆறு முதல் 10 ம் வகுப்பு வரை உயர்நிலைப் பள்ளியாகவும் மாற்றப்பட்டன. மேலும் ஓய்வு, இறப்பு காரணமாக சில தொடக்க, நடுநிலைப் பள்ளி தலைமைஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாகின.இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்தி அப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து 2017 ஜன., 1ல் ஒன்றிய முன்னுரிமை பட்டியலின்படி காலியாக உள்ள தொடக்க, நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும். இதற்கான கலந்தாய்வை இன்று நடத்த மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டது.ஆனால், 'காலிப்பணியிட விபரங்களை முறையாக தயாரிக்கவில்லை' என பள்ளிக் கல்வி அமைச்சருக்கு புகார்கள் அனுப்பப்பட்டன. இதையடுத்து கலந்தாய்வை நிறுத்தி வைக்க கல்வித்துறை உத்தரவிட்டது.

Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்