புறக்கணிக்கப்படும் பட்டதாரி ஆசிரியர்கள் : பாரபட்சத்தால் அதிருப்தி
பத்தாம் வகுப்பு தேர்வு பணியில் தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்ட மூத்த பட்டதாரி ஆசிரியர்களின் அலுவலக பணிக்கு ஊழியர் நியமிக்காததால் கண்காணிப்பு பணி பாதிப்பதாக புகார் எழுந்துள்ளது.
பத்தாம் வகுப்பு தேர்வையொட்டி தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்களாக உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர் நியமிக்கப்படுவர். இரண்டு ஆண்டுகளாக உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு வழங்கப்படாததால் முதன்மை கண்காணிப்பாளர் நியமனத்தில் சிக்கல் நீடித்தது.
இதனால் அப்பணிக்கு மூத்த பட்டதாரி ஆசிரியர்கள் இந்தாண்டு நியமிக்கப்பட்டனர். ஆனால் தலைமையாசிரியர்களுக்கு வழங்குவது போல் எழுத்தர், அலுவலக உதவியாளர் (ஓ.ஏ.,) ஒதுக்கீடு பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்கப்படவில்லை.இதனால் கண்காணிப்பு பணியுடன் பேப்பர் பண்டல் பிரிப்பது, ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை மணி அடிப்பது உட்பட ஓ.ஏ.,க்கள் பணியையும் அவர்கள் கூடுதலாக கவனிக்கின்றனர்.
இதனால் கண்காணிப்பு பணியில் முழு கவனம் செலுத்த முடியவில்லை என புகார் எழுந்துள்ளது.பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் முருகன் கூறுகையில், "தலைமையாசிரியர் பற்றாக்குறையால் கடைசி நேரத்தில் பட்டதாரி ஆசிரியரை முதன்மை கண்காணிப்பாளராக நியமித்தனர். இதனால் பிரச்னை ஏற்பட்டது. அடுத்தாண்டு முன்கூட்டியே திட்டமிட வேண்டும். பற்றாக்குறை இருந்தாலும் கூடுதலாக தின ஊதியம் கொடுத்து, வினாத்தாள் கட்டுக் காப்பு மையத்தில் இரண்டு தலைமையாசிரியர்களை ஏன் நியமிக்க வேண்டும். அந்த இடத்தில், ஒரு பட்டதாரி ஆசிரியரை நியமிக்கலாம்," என்றார்.
Comments
Post a Comment