தேசிய அறிவியல் தினம் - "ராமன் விளைவு" [Raman Effect] என்றால் என்ன?

பொருளொன்றின் வழியே ஒற்றைநிற ஒளி செல்லும் போது சிதறலடைகிறது. சிதறலடைந்த ஒளி, படுகின்ற அதிர்வெண்ணை மட்டுமல்லாமல் சில புதிய அதிர்வெண்களையும் கொண்டிருந்தது. இவ்வாறு சிதறும் ஒளியின் அலைநீள மாற்றத்திற்கு இராமன் விளைவு (Raman Effect) எனப் பெயர். இக்கண்டுபிடிப்பிற்காக இராமனுக்கு 1930- ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.


ஒளி ஓர் ஒளிபுகும் ஊடகத்தின் ஊடே செல்லும் போது, சிதறடிக்கப்பட்டு அதன் அலைநீளத்தில் மாறுதல் ஏற்படுகிறது. இதுவே ராமன் சிதறல் [Raman Scattering] அல்லது ராமன் விளைவு [Raman Effect] என அழைக்கப்படுகிறது. இவ்வாறு உட்புகும் ஒளியில் உள்ள போட்டான்களுக்கும் மூலக்கூறுகளுக்குமிடையே ஆற்றல் பரிமாற்றம் நிகழும்போது வெளிவரும் ஒளியின் அலைநீளம் மாறுகிறது.

இராமன் விளைவில் மாற்றம் அடைந்த அதிர்வெண் கொண்ட வரிகளை இராமன் வரிகள் என்கிறோம். இவ்வாறு சிதறும் ஒளி மூன்று கூறுகளைக் கொண்டுள்ளது. 

அவை

படுகதிருக்குச் சமமான அலைநீளமுள்ள முதன்மை அல்லது ராலே வரி;
முதன்மை வரியைவிட அதிக அலைநீளமுள்ள ஸ்டோக்சு வரிகள்;
முதன்மை வரியைவிட குறைவான அலைநீளமுள்ள எதிர் ஸ்டோக்சு வரிகள்;

பயன்பாடுகள்
இயற்பியலை விட வேதியியலில் இராமன் சிதறல் அதிகம் பயன்படுத்தப்பட்டு உள்ளது. கரிம, கனிம வேதியியலில் சிதைவுறுத்தா வேதிப்பகுப்பிற்கு முதன்மையாக பயன்படுத்தப்படுவது இராமன் விளைவே. பகுப்பிற்குட்பட்ட பொருளின் “கைரேகை” யாக இராமன் நிறமாலை உள்ளது; திரவங்களுக்கு மட்டுமல்லாது வளிம, திடப்பொருள்களுக்கும் இம்முறையைப் பயன்படுத்தலாம் என்பது இதன் சிறப்பு.

பெட்ரோலியவேதித் தொழில், மருந்தாக்கத் தொழில் ஆகியவற்றில் தயாரிப்புகளைக் கண்காணித்தல், சட்டப்புறம்பான போதை மருந்துகளை எடுத்துச்செல்ல பயன்படும் உறைகளைச் சிதைவுறுத்தாமலேயே அவ்வகையான மருந்துகளை இனம் காணல், வண்ணப்பூச்சுகள் இருகும்போது எவ்வித மாற்றங்களை அடைகின்றன என்பதை அறிதல், அணுக்கருக் கழிவுகளை தொலைவிலிருந்தே ஆய்வு செய்தல், 10 -11 வினாடியே ஆயுட்காலம் கொண்ட நிலையற்ற வேதி இனங்களின் நிறமாலைகளை பதிவு செய்வதில் ஒளிவேதியலாளர்கள், ஒளிஉயிரியலாளர்களுக்கு லேசர்-இராமன் நிறமாலையியல் தொழில்நுட்பங்கள் உதவுகின்றன

Comments

Popular Posts

Google Maps! Latest Update for Bikers!