அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள்

>அரசு உதவி பெறும் அனைத்து பள்ளிகளில், ஆங்கில வழி வகுப்புகள் துவங்க, பள்ளிக்கல்வித்துறை அனுமதி அளித்து உள்ளது.

தமிழகத்தில், ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பெரும்பாலான பெற்றோர், தங்கள் பிள்ளைகள் ஆங்கில வழியில் படிப்பதையே கவுரவமாகவும், பெருமையாகவும் கருதுகின்றனர். 

இதனால், அரசு உதவி பெறும் அனைத்து பள்ளிகளிலும், ஆங்கில வழி வகுப்புகளை துவங்க, தமிழக பள்ளிக்கல்வித் துறை அனுமதித்துள்ளது.இதுகுறித்து, பள்ளிக்கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் பிறப்பித்து உள்ள அரசாணை:

தற்போது, ஆங்கில வழி கல்வி முறைக்கு, பெற்றோர் மற்றும் மாணவர்கள் இடையே, பெரும் வரவேற்பு காணப்படுகிறது. இதனால், அரசு பள்ளி களில் ஆங்கில வழி கல்வி பிரிவு துவங்க, ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க, ஆங்கில வழி பிரிவு துவங்க அனுமதி கேட்டுள்ளனர். 

எனவே, மாணவர்களின் நலன் கருதி, அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆங்கில வழி கல்வி பிரிவு துவங்க, அனுமதி அளிக்கலாம் என, அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது.தற்போது அனுமதிக்கப் பட்ட தமிழ் வழி பிரிவுகளில் இருந்து மட்டும், ஆங்கில வழி பிரிவுகளை பிரித்து நடத்த வேண்டும். ஆங்கில வழி பிரிவு கோரும் பள்ளிகளில், 50 சதவீதம், கட்டாய தமிழ் வழியாக இருக்க வேண்டும்.

ஆறு முதல், பிளஸ் 2 வரையுள்ள மாணவர்களிடம், ஆண்டு ஒன்றுக்கு தற்போது வசூலிக்கப்படும் ஆங்கில வழி கற்பிப்பு கட்டணம், தொடர்ந்து வசூல் செய்யப்பட வேண்டும். இதை தவிர, ஆங்கில வழி பிரிவு மாணவர்களிடம், வேறு கட்டணம் வசூலிக்க கூடாது.மேலும், அனுமதி கேட்கும் பள்ளிகளில், ஆங்கில வழி பிரிவு நடத்துவதற்கான உள் கட்டமைப்பு வசதிகள் மற்றும் திறன் பெற்ற ஆசிரியர்கள் உள்ளிட்ட இதர வசதிகள், போதுமான அளவில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இந்த உத்தரவின் படியே, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளிலும், ஆங்கில வழி பிரிவு துவங்க அனுமதி அளிக்கப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Comments