சத்தியமா இது அரசு பள்ளி தான்.. ஒரு நாள் இந்தியாவின் தலைசிறந்த பள்ளியாகும்

ஒரு அரசுப் பள்ளி எப்படி இருக்க கூடாது என்பதற்கு பல பள்ளிகள் சான்றாக உள்ளது. ஆனால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு விரல்விட்டு எண்ணும் அளவில் சில பள்ளிகளே உள்ளது. அதற்கு அந்த பள்ளி நிர்வாகம், பெற்றோர்கள், கிராம இளைஞர்களின் முழு பங்களிப்பு அர்ப்பணிப்பும் ஒரு முகமாக செல்வதே காரணமாக உள்ளது. பல அரசுப் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க பெற்றோர்களே வேண்டாம் என்று சொல்லி பல கி.மீ தூரத்தில் உள்ள தனியார் பள்ளிக்கோ அல்லது அரசுப் பள்ளிகளுக்கோ அனுப்புகிறார்கள். உள்ளுர் பள்ளி மூடப்படும் அபாயம் கூட அவர்களுக்கு தெரிவதில்லை. 


ஆனால் ஒரு சில அரசுப் பள்ளிகளை தேடிச் சென்று சேர்க்கிறார்கள் பெற்றோர். பெற்றோர்கள் தேடிச் சென்று மாணவர்களைச் சேர்க்கும் ஒரு அரசுப்பள்ளியை மத்திய அரசே ஆய்வு செய்து வருகிறது. எப்படி இப்படி இந்த கிராமத்துப் பள்ளிக்கு மட்டும் எல்லாம் சாத்தியமாகிறது என்பது பற்றி..


அப்படியான அந்த அரசுப்பள்ளியை பற்றி தான் இன்று இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம். இந்த பள்ளியை பற்றி நக்கீரன் முதல் முறையாக அறிமுகப்படுத்தவில்லை 10 ஆண்டுகளுக்கு முன்பே நக்கீரன் வெளி உலகிற்கு கொண்டு வந்து காட்டிய பள்ளி தான். அதன் பிறகு எவ்வளவு முன்னேற்றங்களைக் கண்டுள்ளது அந்த பள்ளி. 


தனியார் பள்ளிகளும் இந்த அரசுப் பள்ளியில் வந்து கற்றுக் கொள்ள வேண்டும். அந்தப் பள்ளி புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியத்தில் உள்ள மாங்குடி கிராமத்தில் தான் உள்ளது. கிராமத்தை கடந்து ஒதுக்குப்புறமாக அடர்ந்த காடாக தனித் தீவாக காட்சி அளிக்கும் இடத்திற்குள் சென்றால் உள்ளே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக் கூடம். உள்ளே நுழையும் போதே நாம் எங்கே செல்ல வேண்டும் என்பதை காட்ட வழிகாட்டி பலகையும் சுத்தமான நடைபாதையும் வழிகாட்டியது. அத்தனை அடர்ந்த மரங்கள் நிறைந்த பகுதியில் அந்த வளாகத்தில் ஒரு காய்ந்து உதிர்ந்த இலை கூட இல்லை. 

ஆங்காங்கே குப்பை தொட்டிகள். பள்ளி வளாகத்தை சுற்றி 75 புங்கன் மரங்களும், 50 வேம்பு மரங்களும், நடைபாதை எங்கும் அடிக்கடி வெட்டப்பட்ட அழகு செடிகள். வளாகத்தில் எங்கேயும் சூரியனின் தாக்கம் இல்லை. மரங்களின் இலைகளுக்கு இடையில் புகுந்து மின்னலாய் வந்து மறைகிறது வெயில்.

பள்ளி வரும் மாணவர்கள் பள்ளிக்குள் நுழைந்தவுடன் ஒரு இடத்தில் நீண்ட வரிசையாக நின்று எதையே அழுத்திவிட்டு அகன்றனர். அதே போல தலைமை ஆசிரியர் முதல் பள்ளி ஆசிரியர்களும்.. ஆம் ஆசிரியர்களும், மாணவ, மாணவிகளும் தங்கள் வருகையை பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்துவிட்டு வகுப்புகளுக்குள் சென்றார்கள். 

அரசுப்பள்ளியில் பயோமெட்ரிக் முறையா என்ற நமது வியப்பிற்கு வரிசையில் நின்ற மாணவன் சொன்னான் அண்ணே இது போன வருசத்துல இருந்தே நாங்க இப்படித்தான் வருகையை பதிவு செய்றோம். இதனால் யார் தாமதமாக வந்தாலும் தெரிந்துவிடும். நாங்க மட்டுமில்ல ஆசிரியர்களும் தாமதமாக வருவதில்லை. வெளியே செல்ல வேண்டும் என்றால் மறுபடியும் கட்டைவிரல் ரேகை பதிந்த பிறகு தான் செல்ல வேண்டும் என்றான்.ஒரு மாணவர் மணி அடிக்க பிரேயர் தொடங்கியது. பல மாணவர்கள் மேடை ஏறினார்கள் தமிழ்தாய் வாழ்த்து தொடர்ந்து தமிழ், ஆங்கில செய்திகள் வாசித்தல், பொன்மொழி, தலைவர்கள், திருக்குறள், இப்படி பல மாணவர்களும் சொல்லி முடித்து வரிசையா சென்று வகுப்புகளில் அமர்ந்தனர். 

இப்ப சொன்ன குறளையும், தெளிவுரையையும் மாலை இதில் எந்த மாணவரை அழைத்தாலும் வந்து சொல்லனும் அண்ணே என்று சொல்லிவிட்டு போனார் ஒரு மாணவி. தலைமை ஆசிரியர் அறைக்குச் சென்றால் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்து முதல் வகுப்பு சேர்க்க ஒரு தாத்தா பேரனுடன் வந்தவரிடம் தலைமை ஆசிரியர் ஜோதிமணி உங்க ஊர்ல தான் பள்ளிக்கூடம் இருக்கே அங்கே சேருங்களேன் என்று சொல்ல இல்லய்யா எங்க ஊர்ல இருந்து நிறைய புள்ளைங்க இங்க தான் வருதுங்க அவங்க கூட தான் போவேன்னு பேரன் சொல்றான் அதனால் இங்கேயே சேர்த்துகிருங்க என்றார் அந்த தாத்தா..


தலைமை ஆசிரியர் அறைக்குள் கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகள் ஓடிக் கொண்டிருக்க இது என்ன வகுப்புகளுக்குள்ளும் கேமரா பொருத்தப்பட்டுள்ளதா என்ற நமது கேள்விக்கு அமைதியாக சிரித்த தலைமை ஆசிரியர்.. ஆமா சார்.. மொத்தம் 10 கேமரா பொருத்தி இருக்கிறோம். 8 வகுப்பறைகளுக்கும் கேமரா, ஸ்மார்ட் கிளாஸ்ல ஒன்று பள்ளி வளாகத்தை கண்காணிக்க ஒன்று என்று 10. இதுக்கு கிராமத்து இளைஞர்கள் உதவி செஞ்சாங்க. 


மொத்தம் 63 ஆயிரம் வந்தது. அதில் எங்கள் பங்கு 21 ஆயிரம் கட்டி தன்னிறைவு திட்டத்தில் வாங்கிவிட்டோம். டி.வி மட்டும் தனியா ரூ. 21 ஆயிரம். இந்த கேமரா வைக்கப்பட்டதால அனைத்து ஆசிரியர்களும் தங்கள் பணியை சிறப்பாக செய்வார்கள். மாணவர்களின் சேட்டைகளும் இருக்காது. (இது இல்லை என்றாலும் நடக்க வேண்டியது அனைத்தும் சிறப்பாக தான் நடந்துவந்தது) ஒரு மாதம் அனைத்து பதிவுகளும் இதில் இருக்கும். இன்னும் சில கேமராக்கள் வாங்கி பொருத்தனும் 20 நாட்களுக்குள் பொருத்திவிடுவோம் என்றவரிடம் அது என்ன சார் ஸ்மார்ட் கிளாஸ் என்றோம்..


அருகில் உள்ள ஒரு அறையில். பெரிய தனியார் அலுவலகங்களில் போல காட்சி அளித்தது ஏசி அறை, விலை உயர்ந்த சுழல் நாற்காலிகள். முன்னால் பெரிய திரை, மேலே புராஜெக்டர், அறையில் 14 கணினிகள், ஸ்மார்ட் டி.வி இப்படி இருந்தது அந்த அறையில. அறையினுள் வந்த 8 ம் வகுப்பு மாணவர்களின் ஒரு மாணவர் புரஜெக்டரை உயிர்ப்பித்தான். அந்த நேர வகுப்புக்காண பாடங்களை திரையில் ஓடவிட்டான் மாணவர் சுழல் நாற்காலியில் அமர்ந்திருந்தபடியே திரையை காண ஆசிரியர் விளக்கம் கொடுத்தார். 

தமிழ் பாடத்தில் ஒரு பகுதியை பற்றி முழுமையாக அறிந்து கொள்ள உடனே கூகுளில் தேடி ஒரு தலைவரைப் பற்றிய அனைத்து வீடியோக்களையும் திரையில் காட்டினான் அந்த மாணவர். இப்படி அனைத்து மாணவர்களும் இயக்கினார்கள். அந்த அறையில் இருந்து வெளியே வந்தால் ஒவ்வொரு வகுப்பறை வாசலிலும் புகார் பெட்டி. இது எதுக்கு என்ற நமது பார்வைக்கு அந்த வழியாக அடுத்த வகுப்புக்கு சென்ற மாணவன்.. இந்த புகார் பெட்டி பல வருசமா இருக்கு. இதில் எங்களுக்காண குறைகளை எழுதிப் போட்டுட்டா ஒவ்வொரு நாளும் திறக்கப்பட்டு அதற்காண தீர்வு கிடைக்கும்.

சில வருடங்களுக்கு முன்னால ஒரு மாணவியும் அவர் தம்பியும் வீட்டுப்பாடங்கள் செய்யாமல் தினமும் வந்தாங்க. வகுப்புகளில் சோர்ந்து போய் இருந்தாங்க. அவங்க சோர்வை பார்த்தவுடன் என்னம்மா உனக்கு பிரச்சனை என்று தலைமை ஆசிரியர் கேட்டார் அந்த மாணவியாள பேச முடியல குமுறி குமுறி அழுதது. சரிம்மா உன் பிரச்சனை என்ன என்பதை இந்த புகார் பெட்டியில எழுதி போடு உடனே சரி செய்றேன்னு சொன்னார்.

 மதியம் சாப்பாட்டு நேரத்துல அந்த மாணவியும் அவர் தம்பியும் தனியா உக்கார்ந்து புகார் எழுதி கொண்டு வந்து போட்டாங்க. மாலை அவர்கள் வீட்டுக்கு போனதும் சாரும் வீட்டுக்கு போய் அவங்க வீட்ல அவங்க அப்பா அம்மாகிட்ட பேசிய பிறகு அவங்க நல்லபடியா வந்தாங்க. 


அந்த புகாரில் என்ன இருந்தது தெரியுமா அண்ணே.. எங்க அப்பா தினமும் குடிச்சுட்டு வந்து எங்க அம்மாவை அடிப்பார் அடுப்புல இருக்கிற உளையை தூக்கி போட்டு உடைச்சுடுவார். அதனால நாங்க வீட்ல இரவு சாப்பாடு இல்லாம பட்டினியா தான் கிடப்போம். இரவு முழுவதும் சத்தம் போட்டுக்கிட்டே இருப்பார் அதனால படிக்கவும், எழுதவும் முடியல. 

நான் பசி தாங்கினாலும் என் தம்பி பசி தாங்க முடியாமல் அழுவான் பச்சத் தண்ணியை கொடுத்து தூங்க வைப்பாங்க அம்மா. பள்ளிக் கூடத்தில தான் நிறைவா சாப்பிடுறோம் என்று எழுதி இருந்தார். அந்த எழுத்தில் அந்த மாணவியின் கண்ணீர் துளியும் சில எழுத்துகளை அழித்திருந்தது. அதைப் பார்த்துட்டு தான் சார் அவங்க வீட்டுக்கு போய் அப்பா அம்மாகிட்ட எடுத்து பேசி குழந்தைகளுக்காக கொஞ்ச நாள் வாழுங்கள். 

அவர்களை படிக்க விடுங்கள் என்று எடுத்துச் சொன்னதும் அப்பா அன்றோடு குடிப்பதை நிறுத்திக் கொண்டு குழந்தைகளுக்காக வேண்டியதை செய்தார். அதன் பிறகு அந்த மாணவியும், அவர் தம்பியும் நல்லா படிச்சாங்க சார். இந்த புகார் பெட்டிக்கு இந்த மாதிரி எத்தனையோ கதை இருக்கு என்று சொல்லிவிட்டு நடந்தார் அந்த மாணவர்.


புகார் பெட்டியை கடந்து ஒரு வகுப்பறைக்கள் நுழைந்தால் வணக்கமய்யா என்ற டை கட்டிய மாணவ, மாணவிகளின் கனீர் குரல் நம்மை வரவேற்க.. அந்த அறையை நாம் நமது கண்களை சுழலவிட்டால் அங்கும் ஸ்மார்ட் போர்டு அருகில் ஸ்டார்ட் டி.சி., பெரிய கண்ணாடி, சீ்ப்பு, பவுடர், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய், அங்கும் ஒரு தபால் பெட்டி, அலமாரி முழுவதும் புத்தகங்கள்.. இப்படி பலவற்றை நாம் காண முடிந்த நிலையில் இந்த பொருட்களின் பயன்பாடு என்ன என்ற நமக்கு ஒரு மாணவி.. நாங்க தினமும் ஷூ, போட்டு டை கட்டி தான் பள்ளிக்கு வருவோம். 

தனியார் பள்ளிக்கு போறங்க தான் அப்படி போகனும் அரசு பள்ளிக்கு போற நாங்களும் அப்படி வரமுடியும் என்பதை காட்டினோர். ஷூ வை வெளியே உள்ள ராக்கையில கழட்டி வச்சுட்டு தான் உள்ளே வரனும். அப்பறம் நாங்க தூரத்தில் இருந்து வரும் போது தலை கலைஞ்சிருந்தால் வந்த உடனே கண்ணாடியை பார்த்து தலை சீவி பவுடர் பூசிக்குவோம். பல வருசமா எங்களுக்கு வகுப்பறைக்குள்ளேயே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தான். இந்த தபால் பெட்டி எதுக்குன்னா கடிதம் எழுதும் பழக்கம் இந்த தலைமுறைக்கு மறந்து போச்சு. 

அதனால எங்கள் பள்ளிக்குள் உள்ள நண்பர்களுக்கு தபால் எழுதி போடுவோம். அதை எடுக்க பிரிக்க, கொடுக்க என்று தபால் ஊழியர்களம் சுழற்சி முறையில் இருப்பாங்க. தபால்களை எடுத்து சீல் வைத்து டெலிவரி செவ்யாங்க. அதனால கடிதம் எழுதும் பழக்கம் எங்களுக்கு மறக்கல. இங்கேயும் ஸ்மார் கிளாஸ் தான். அதே போல கல்வி சம்மந்தமாக சி.டி களை டி.வியில பார்க்க இந்த ஸ்மார்ட் டி.சி. 3 வகுப்பில் இருந்து அனைவருக்கும் கணினி இயக்க தெரியும் என்றார் அந்த மாணவி.அப்போது நாங்கள் இங்கு வந்திருப்பதை பற்றி வகுப்பகளுக்கு செல்வது பற்றி எல்லாம் கதை, கவிதை, ஓவியம் தீட்ட முடியுமா? என்றோம் 5 நிமிடம் பொருங்கள் என்ற ஒட்டு மொத்த மாணவமணிகளும் அவர்களின் திறனை காகிதங்களில் காண்பித்தார்கள். அத்னையும் அர்ப்புதம். கண்காணிப்பு கேமரா இருப்பதால் உங்களுக்கு சிரமம் இல்லையா என்ற நமது கேள்விக்கு.. அதில் என்ன சிரமம் எப்போதும் போல நாங்கள் இருக்கிறோம் வகுப்பு ஆசிரியர் விடுப்பு என்றால் அந்த வகுப்பிற்கு என்ன பாடமோ அதை உடனே ஸ்மார்ட் திரையி்ல் திரையிட்டு படிக்க போறோம். 

எங்களுக்கு தையல், ஒயர் கூடை பின்னுதல் போன்ற பயிற்சியும் உண்டு. அதனால விடுமுறை நாட்களில், தீபாவளி, பொங்கல் நாட்களில் துணி தைத்து சம்பாதிக்கிறோம். ஒயர் கூடைகள் பின்னி கொடுத்து சம்பாதிக்கவும் கற்று கொடுத்துட்டாங்க என்றார்கள். மதிய உணவு நேரத்தில் வரிசையாக ஒரு பக்கம் தட்டுகளோடு சென்ற மாணவர்கள் அங்கிருந்த தண்ணீர் குழாய்களில் கை, தட்டுகளை கழுவிக் கொண்டு மதிய உணவு கொடுக்கும் இடத்திற்கு வரிசையாக வந்து சாப்பாட்டையும் முட்டையையும் வாங்கிக் கொண்டு மரத்தடி நிழலில் டைல்ஸ் தரையில் அமைர்ந்து உண்டனர். வகுப்பறைகள் மட்டுமல்ல பிரேயர் நடக்கும் இடம், உணவு உண்ணும் இடம் வரை டைல்ஸ் பதிக்கப்பட்டுள்ளது.


அண்ணே எங்க கிளாஸ்க்கும் வாங்க என்று 4 ம் வகுப்பு மாணவன் அழைக்க அங்கு சென்றோம்.. அங்கும் ஸ்மார்ட் கிளாஸ்க்காண ஆயத்தப்பணிகள் முடிவடைந்து ஏ.சி, கண்ணாடி கதவுகள் பொருத்துவதோடு காத்திருந்தது. வழக்கம் போல மற்ற வகுப்புகளில் உள்ளது போலவே காட்சி அளித்தாவும் அலமாரியில் இது என்ன ஒவ்வொரு தடுப்பிலும் ஒரு பெயர் இருக்கே என்றோம்.. இதுவா.. இந்த அலமாரியில இருக்கிறது எல்லாம் எங்களின் ஒவ்வொரு ஆண்டின் எங்களைப்பற்றிய அனைத்தும் இருக்கம் 

அதாவது புத்தகம், நோட்டுகள், தேர்வு தாள்கள், எங்களைப் பற்றிய குறிப்பேடுகள் எல்லாம் இருக்கு. ஒரே நாளில் அனைத்து பாடங்களுக்கும் வீட்டுப்பாடம் இருக்காது. தி்ங்கள் கிழமை தமிழ் என்றால் அந்த புத்தகம், அதற்காண நோட்டு மட்டும் எடுத்துட்டு போவோம். மற்ற அனைத்து புகத்தம், நோட்டுகளை இந்த அலமாரியில எங்களுக்காண தடுப்பில் வைத்துவிட்டு போவோம். அதனால மனசுமையும், புத்தக சுமையும் குறையுது. அதே போல வாராந்திர தேர்வு, மாதாந்திர தேர்வுகள் எழுதின எல்லா தாள்களும் இதிலேயே இருப்பதால் ஒவ்வொரு தேர்விலும் எத்தனை மதிப்பெண் எடுத்தோம் என்பதை அறிய முடியும் ஆண்டின் இறுதியில் மொத்தமாக பார்க்க முடியும் என்றார்.


இரண்டாம் வகுப்பில் ஒரு மாணவன் வெள்ளை பலகையில் மார்க்கரில் எழுதிக் கொண்டிருக்க.. சாக்பீஸ் இல்லையா? மார்க்கரில் எழுதுறாங்களே என்ற போது.. அந்த மாணவன் எங்க பள்ளியில சாக்பீஸ் பயன்படுத்துறது இல்லை. அதனால தூசி வந்து இருமல் வருது. அதனால மார்க்கர் தான் என்றார்.
google_language = "en"; google_ad_client = "ca-pub-7414990647107959"; google_ad_slot = "3037586228"; google_ad_width = 300; google_ad_height = 250;
align: justify;">
 அருகில் இருந்த வகுப்பு ஆசிரியர் கருணாநிதி.. ஆமா சார்.. கரும் பலகை திட்டத்தை எங்கள் பள்ளி 3 வருடங்களுக்கு முன்பு மாற்றி வெள்ளை பலகை திட்டத்தை கொண்டு வந்துட்டோம். அதாவது கரும்பலகையில சாக்பீஸ்ல எழுதும் போது சாக்பீஸ் தூள் கொட்டி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்குமே ஒவ்வாமை ஏற்படுது. அதனால மார்க்கர் திட்டத்தை செயல்படுத்திட்டோம். அதற்காக வெள்ளை பலகை வாங்கியாச்சு. சாக்கீஸ்க்காக செய்யும் செலவைவிட மார்க்கருக்கு செலவும் குறைவாக உள்ளது. யாருக்கும் ஒவ்வாமை ஏற்படுவதில்லை. அதைவிட அனைத்து மாணவர்களும் தொடக்கத்திலேயே பலகையில எழுதும் பழக்கத்தை ஏற்படுத்துகிறோம் என்றார்.


இத்தனையும் எப்படி சாத்தியம்.. என்ற வினாவோடு மீண்டும் தலைமை ஆசிரியர் அறைக்கு சென்றோம்.

தலைமை ஆசிரியர் ஜோதிமணி.. 2004 ம் ஆண்டு செப்டம்பரில் இந்த பள்ளிக்கு வந்த போது வழக்கமான அரசுப்பள்ளியாகத் தான் இருந்தது. பின்தங்கிய இந்த கிராமத்தில் இருந்து வெளியூர்களுக்கு மாணவர்கள் செல்வதை நிறுத்தி நம் பள்ளியில் சேருங்கள் என்று பெற்றோர்களை சந்தித்து பேசினேன். முதலில் தயங்கினார்கள். 

பிறகு வாய்வழியாக சொல்வதைவிட செயலில் காட்டினால் என்ன என்று முடிவெடுத்து மாணவர்களுக்கு மதிப்பெண்ணைவிட எழுத்து, பேச்சு, கலை, விளையாட்டு, இப்படி ஓராண்டு ஓடிய நிலையில் இந்த மாணவர்களைப் பார்த்து தனியார் பள்ளிக்கும் மற்ற ஊர் பள்ளிக்கும் சென்றவர்களை கொண்டு வந்து சேர்த்தார்கள். அதன் பிறகு அப்போதைய காலக்கட்டத்தில் கணினி என்பது மாணவர்களுக்கு ஆச்சரியமான ஒன்றாக இருந்த நேரம். அதனால் ஒரு தொண்டு நிறுவன உதவியுடன் கணினி பெற்று அந்த கணினியில் மாணவர்களுக்கு முழு பயிற்சி கொடுத்தோம். டைப்பிங், பிரின்ட் அவுட் வரை கற்றுக் கொண்டார்கள். 

தொடர்ந்து தையல் போன்ற கைத்தொழில் பயிற்சி கொடுத்தோம். படிப்படியாக தொழில்நுட்பம் வளர வளர அதற்கு ஏற்றார் போல் மாற்றிக் கொண்டே இருந்தோம். முதலில் ஒழுக்கம் வேண்டும் என்பதால் பள்ளியை தூய்மை படுத்தி பாதை அமைத்து மரங்களும் செடிகளும் அமைத்த்தோடு பள்ளியில் புகார்பெட்டி, தபால் பெட்டி வைத்து பிரேயரை மாணவர்களை வைத்தே நடத்துவது என்பதை கொண்டு வந்து தமிழ், ஆங்கில செய்தி தாள்கள் வாசித்தல் கொண்டு வந்த நிலையில் மேலும் குழந்தைகள் வந்தார்கள். அப்ப தான் 2007 ஜனவரியில் நக்கீரன் அடிக்காத அரசுப்பள்ளி என்று செய்தி கட்டுரை வெளியிட்டது. அதன் பிறகு எங்கள் பள்ளிக்கு வராத பத்திரிக்கைகள் இல்லை.


மாதம் ஒரு முறை பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம். வாரம் ஒரு முறை இலக்கிய மன்றம், அதில் மாணவர்களின் தனித்திறனை வெளிக்காட்டிக் கொண்டார்கள். இப்ப எங்கள் மாணவர்கள் கதை, கவிதை, கட்டுரை, ஓவியம் எல்லாம் நல்லா தெரியும். எங்கள் பள்ளி மாணவ, மாணவிகள் வெளியே செல்லும் போது சொந்தக்காலில் நிற்கும் மனிதான உருவாக்கி அனுப்புகிறோம். இன்றைய டி.வி சீரியல்களில் வரும் டயலாக்குகளைவிட எங்கள் மாணவர்கள் சிறப்பாக எழுதுவார்கள். கடந்த சில ஆண்டுகளாக படிப்படியாக மாற்றங்கள் செய்யும் வகையில் முதலில் பயோமெட்ரிக் முறையை கொண்டு வந்து வருகை பதிவை பதிவு செய்தோம். மாணவர்கள், ஆசிரியர்களிடம் நல்ல வரவேற்பை கொடுத்தது. 


அதன் பிறகு ஸ்மார்ட் கிளாஸ் கொண்டு வர திட்டமிட்டோம் முதலில் ரூ. 1.6 லட்சம் மதிப்பில் 2 ஸ்மார்ட் திரையும், புரஜெக்டரும் வாங்கியாச்சு. மற்ற வகுப்புகளுக்கு வெள்ளை பலகையும் வாங்கியாச்சு. இனி புரஜெக்டர் மட்டும் வரனும், அதற்கு ஏசி வேண்டும். அதுவும் தயாராகிவிட்டது. வகுப்பறைகளில் டைல்ஸ், போட்டாச்சு, கண்ணாடி கதவுகள் இந்த வாரம் தயாராகி 3 முதல் 8 வரை வகுப்புகள் ஏசி அறையில் ஸ்மார்ட் வகுப்புகாளகத் தான் நடக்கப் போகுது. ஸ்மார்ட் வகுப்பறையால் பாடபுத்தகத்தில் உள்ள படத்தை கரும்பலகையில் வரைந்து சொல்லிக் கொடுப்பதை விட இதயம் எந்த இடத்தில் உள்ளது அதன் செயல்பாடு எப்படி என்பதை எல்லாம் திரையிட்டு காடுவதால் மாணவர்கள் உடனே புரிந்து கொள்ள முடிகிறது. இனைய வசதியும் அனைத்து வகுப்புகளுக்கும் உள்ளது.

அடுத்து கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியாச்சு. இப்ப மாணவர்கள் செய்யும் வீட்டுப்பாடங்களை ஒவ்வொரு நாளும் செய்து முடித்த பிறகு அந்தந்த வகுப்புகளுக்கான மெயிலுக்கு அனுப்பிவிட வேண்டும். அதற்காக வீட்டில் ஸ்மார்ட் போன் உள்ளவர்கள் யார்னு கேட்டோம் யார் வீட்லயும் இல்லை. அதனால உடனே ரூ. 6 ஆயிரம் மதிப்பில் 10 டேப்லெட்களை வாங்கியாச்சு. இனி எங்கள் மாணவர்கள் வீட்டில் செய்த வீட்டுப் பாடங்களை பள்ளிக்கு வந்த்தும் இந்த ஸ்மார்ட் போனில் படம் எடுத்து அவர்களின் ஐ.டி.யில் இருந்து அந்த வகுப்புக்கான மெயிலுக்கு அனுப்பனும். அந்த பாட ஆசிரியர் தினமும் மெயிலை பார்க்கனும். 

பார்த்து மாணவர்கள் செய்திருப்பது சரியா என்பதை கவணித்து தவறு என்றால் உடனே திருத்த வேண்டும். யார் அனுப்பவில்லை என்பதை பார்த்து ஏன் அனுப்பவில்லை. எதற்காக வீட்டுப்பாடம் எழுதவில்லை என்பதை எல்லாம் குறிப்பு எழுதனும். 3 மாணவர்களுக்கு ஒரு டேப்லெட் கொடுக்கப் போறோம். இந்த வருசத்துக்கு இது தான் புதுசு.

 இதற்கு இவ்வளவு செலவு செய்ய எங்கள் பணம் ஒரு பைசா கிடையாது. அரசு நிதியை முழுமையாக பயன்படுத்துவதுடன் இந்த கிராமத்தைச் சேர்ந்த இந்த பள்ளியின் முன்னால் மாணவர்கள், பெற்றோர்கள் எல்லாரும் பள்ளிக்கு என்ன வேண்டும் என்று கேட்டு வருவார்கள். அவர்கள் வரும் போது என்ன தேவையே அதை சொன்னால் அவர்கள் செய்து கொடுக்கிறார்கள். அவர்களிடம் இருந்து பள்ளி கணக்கில் தன்னிறைவு ( நமக்கு நாமே) திட்டத்தில் செலுத்தி ஒரு பங்க எங்களுடையது 2 பங்கு அரசாங்கம் கொடுக்குது. அப்படித் தான் 21 ஆயிரம் செலுத்தி 63 ஆயிரத்துக்கு கேமரா வாங்கினோம். எல்லா திட்டங்களும் அப்படித் தான் செயல்படுத்தப்பட்டது.


இதற்கு சக ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், கிராமத்து இளைஞர்கள், முன்னால் மாணவர்கள், வெளியில் இருந்து பள்ளிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட கொடையாளர்களின் பங்கு தான் அதிகம். முதலில் அவர்களுக்கு தான் நான் நன்றி சொல்லனும். 

அடுத்து அதிகாரிகள் அனைவரும் நல்ல ஒத்துழைப்பு கொடுக்கிறார்கள் என்றார். இந்தியாவின் முன்மாதிரி பள்ளியாகும்.. இந்த பள்ளியை பற்றி கேள்விப்பட்டு மத்திய மனிதவள மேம்பாட்டு ஆணையம் 2007 ம் ஆண்டு ஆய்வு செய்துள்ளது. அதன் பிறகு தமிழக அரசும் பல முறை ஆய்வுகள் செய்துள்ளது. இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே பள்ளியாக மாங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை புதுக்கோட்டை அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் சார்பில் 20 முறைக்கு மேல் ஆய்வு செய்துள்ளனர்.


அந்த ஆய்வில் மாணவர்களின் எழுத்து, பேச்சு, மொழி உச்சரிப்பு, வாக்கியம் அமைத்தல், தனி திறன் மற்றும் பள்ளியில் உள்ள வசதிகள், அந்த வசதிகள் முறையாக பயன்படுத்தப்படுகிறதா,? அரசு திட்டங்களை வாங்கி முடங்கி வைத்துள்ளார்களா? செயல்படுத்தப்படுகிறதா? சுற்றுசூழல், கட்டுமானம், இப்படி பல வகையிலும் ஆய்வுகள் செய்யப்பட்டு அரசுக்கு அறிக்கை கொடுக்க தயாராகி வருகிறார்கள். இந்த அறிக்கைக்கு பிறகு மாங்கடி அரசு நடுநிலைப்பள்ளி இந்தியாவின் முன்மாதிரி பள்ளியாக அறிவிக்கப்படாலம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு இந்த பள்ளியை போல மற்ற அரசுப் பள்ளிகளை செயல்படுத்த அரசு திட்டமிடலாம். இப்போது ஸ்மார்ட் போன் திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. ஸ்மார்ட் கிளாஸ் அறிவித்துள்ளது அதுவும் மேல்நிலைக் கல்விக்கு ஆனால் மாங்குடியில் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த அரசுப்பள்ளிக்கு ராயல் சல்யூட் அடித்து வெளியே வந்தோம். வெளியேற மனமில்லை.

Comments

Popular Posts

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்