பள்ளிக் கல்வித்துறை உத்தரவு மாணவர்கள் குறைவாக இருந்தால் வகுப்புகளை மூட வேண்டும்

பள்ளிக் கல்வி இயக்குநர் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது: 

1 முதல் 10ம் வகுப்பு வரையும், 1 முதல் பிளஸ் 2 வரையும் இயங்கும் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரையில் உள்ள பிரிவுகளில் 60 மாணவர்கள்  இருந்தால் அந்த பள்ளிகளில் 2 ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும். 61  முதல் 90 மாணவர்கள் இருந்தால் 3 ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும்.

91 முதல்  120 மாணவர்கள் இருந்தால் 4 ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும். இதேபோல ஒவ்வொரு 30 மாணவர்களுக்கும் 1 ஆசிரியர் கூடுதலாக அனுமதிக்க  வேண்டும். நடுநிலைப் பள்ளிகளில் 6  முதல் 8ம் வகுப்பு வரை குறைந்தபட்சம் 3 ஆசிரியர் பணியிடங்கள் அனுமதிக்க வேண்டும். 

ஒரு வகுப்பில் 35 மாணவர்கள்  இருந்தால் ஒரு பிரிவாக கணக்கிட்டு ஒரு ஆசிரியர் பணியிடம் நிர்ணயம் செய்ய வேண்டும். 50 மாணவர்கள் இருந்தால் இரண்டு பிரிவாக கணக்கிட்டு  கூடுதல் பிரிவு ஏற்படுத்தலாம். 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளில் 5 ஆசிரியர்கள் அனுமதிக்க வேண்டும். 9 மற்றும் 10ம்  வகுப்புகளில் தலா 40 மாணவர்கள் இருந்தால் (1:40) ஒரு வகுப்புக்கு ஒரு ஆசிரியர் நியமிக்க வேண்டும்.

60க்கு அதிகமாக இருந்தால் கூடுதல் பிரிவு ஏற்படுத்த வேண்டும். ஆங்கில வழிக் கல்வி வகுப்புகளில் 15 மாணவர்களுக்கு குறைவாக இருந்தால்  அவர்களை அருகில் உள்ள பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேனிலை பிரிவுகளை பொறுத்தவரையில் பள்ளி அமைந்துள்ள பகுதி நகராட்சி, மாநகராட்சி பகுதியாக இருந்தால் குறைந்தபட்சம் 30 மாணவர்களும்  மற்ற ஊரக பகுதியாக இருந்தால் குறைந்தபட்சம் 15 மாணவர்களும் இருக்க வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

Comments