காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி நீதிபதிக்கு அரசுப்பள்ளி மாணவ-மாணவிகள் கடிதம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், கர்நாடக மாநிலம் உரிய தண்ணீரை தமிழகத்திற்கு வழங்கவேண்டும் என வலியுறுத்தியும் தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், கல்லூரி மாணவ-மாணவிகள், வியாபாரிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் குளித்தலை பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியை சேர்ந்த மாணவ-மாணவிகள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் ஒன்றை நேற்று அனுப்பினர்.

அதுபற்றிய விபரம் வருமாறு:-

கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளிகளில், மாரியம்மன் கோவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியும் ஒன்று. ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் 80 மாணவர்கள், 90 மாணவிகள் என மொத்தம் 170 பேர் படித்து வருகின்றனர்.

தலைமை ஆசிரியர், ஆசிரிய-ஆசிரியைகள் என மொத்தம் 10 பேர் பணியாற்றி வருகின்றனர். இந்தநிலையில் நேற்று மாணவ- மாணவிகள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவிற்கு தங்கள் கைப்பட கடிதம் எழுதி அனுப்பினார்கள்.

அந்த கடிதத்தில், “தமிழகத்தில் விவசாயம் குறைந்துவிட்டது. காரணம் காவிரி நீர் போதிய அளவு தமிழகத்திற்கு கிடைக்கவில்லை. காவிரி பிரச்சினை குறித்த தங்களின் மேலான உத்தரவை உறுதியாக அமல்படுத்தும்படி, கர்நாடக மாநிலத்திற்கு அறிவுரை வழங்க தங்களை தாழ்மையுடன் வேண்டி கேட்டுக்கொள்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

காவிரி நீரை தமிழகத்திற்கு பெற்றுத்தர வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ள இந்த மாணவ-மாணவிகளின் செயல் பாராட்டுக்கு உரியதாக உள்ளது. 

Comments

  1. நல்ல முயற்சி பாராட்டுக்கள்

    ReplyDelete

Post a Comment