ரூ.35,000 வரை விலை போன சி.பி.எஸ்.இ வினாத்தாள்



ரூ.35,000 வரை விலை போன சி.பி.எஸ்.இ வினாத்தாள் மறுத்தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம்


சி.பி.எஸ்.இ வினாத்தாள்கள் ரூ.35,000 வரை விலை பேசப்பட்டுள்ளது. மறுத்தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

மத்திய அரசு கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து வருகிறது.

இதில் கடந்த 26-ந்தேதி நடந்த 12-ம் வகுப்பு பொருளாதார தேர்வு மற்றும் 28-ந்தேதி நடந்த 10-ம் வகுப்பு கணிததேர்வு ஆகியவற்றின் வினாத்தாள் டெல்லி உள்பட வட மாநிலங்களில் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.


வினாத்தாள் வெளியான இந்த இரு பாடங்களுக்கும் மறுத்தேர்வு நடத்தப்படும் என்று சி.பி.எஸ்.இ. அறிவித்தது. அதன்படி 12-ம் வகுப்பு பொருளாதார பாடத்துக்கான மறுதேர்வு வருகிற ஏப்ரல் 25-ந்தேதி நடக்கிறது.


10-ம் வகுப்பு கணிதத் தேர்வு வினாத்தாள் டெல்லி மற்றும் அரியானாவில் மட்டுமே அவுட் ஆனதால் அந்த இரு மாநிலங்களில் மட்டுமே மறுதேர்வு நடைபெறும். இதுபற்றி இன்னும் 15 நாட்களில் முடிவு எடுக்கப் படும் என்றும் சி.பி.எஸ்.இ. தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு கணித பாடத்துக்கு மறுதேர்வு இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், சிபிஎஸ்இ மாணவர்கள் மறுத்தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிபிஎஸ்இ அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் காரணமாக சிபிஎஸ்இ அலுவலகம் அமைந்துள்ள சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


சிபிஎஸ்இ தலைமை அலுவலகம் அமைந்துள்ள ப்ரீத் விகார் பகுதியில் நடைபெற்ற முற்றுகை போராட்டத்தில் சிபிஎஸ்இ மாணவர்கள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர். மேலும் வினாத்தாள் வெளியானதை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.  மேலும் மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் இல்லம் நோக்கியும் பேரணியாக சென்றனர். அவர்களை போலீசார் வழியிலேயே தடுத்து நிறுத்தினர். இந்த போராட்டத்தில் காங்கிரஸ் உள்பட பல்வேறு பிரிவினர் கலந்து கொண்டனர்.


சி.பி.எஸ்.இ. வினாத்தாள் அவுட் ஆனது பற்றி டெல்லி போலீசார்  வழக்குப்பதிவு செய்து பலரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். நேற்று ஜார்கண்டில் இது தொடர்பாக 4 மாணவர்கள் உள்பட 8 பேர் கைது செய்யப் பட்டனர்.


ஜார்க்கண்ட் மாநிலம் சத்ரா நகரில் வாட்ஸ் அப்பில் 10-ம் வகுப்பு கணித தேர்வுக்கான வினாத்தாளை வெளியிட்டதாக இவர்களை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். மேலும் 2 பயிற்சி பள்ளி நிர்வாகிகளிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


இதற்கிடையே அவுட் ஆன 12-ம் வகுப்பு பொருளாதாரம் வினாத்தாளையும் 10-ம் வகுப்பு கணிதம் வினாத்தாளையும் வாட்ஸ் அப்பில் 6000 பேர் வரை பார்த்து இருப்பதாக போலீசார் கண்டுபிடித்துள்ளனர். 10 வாட்ஸ் அப் குரூப்கள் மூலம் இந்த கேள்வித்தாள் வீடியோக்கள் ஒருவருக்கொருவர் அனுப்பி வைத்துள்ளதும் தெரியவந்துள்ளது.


இந்த வினாத்தாள்கள் ரூ.35,000 வரை விலை பேசப்பட்டுள்ளது. இதற்கு சம்மதித்து பணம் கொடுப்பவர்களின் வாட்ஸ் அப் எண்ணுக்கு கேள்வித்தாள்கள் அனுப்பி வைத்துள்ளனர். தொடக்கத்தில் ரூ.35,000-க்கு விலைபோன வினாத்தாள்கள் பரிட்சை நடைபெறுவதற்கு முதல் நாள் ரூ.500க்கு கூட விற்கப்பட்டுள்ளது.   சி.பி.எஸ்.இ. மண்டல இயக்குனர் கூறும்போது வினாத்தாள் அவுட் ஆனது தொடர்பாக 6 புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும் அந்த புகார்கள் மீது சிறப்பு புலனாய்வுத் துறை விசாரணை நடப்பதாகவும் தெரிவித்தார்.

Comments